Sudarshan Setu Bridge: குஜராத்தில் கட்டப்பட்டுள்ள சுதர்சன் சேது பாலம் 2.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது.
சுதர்சன் சேது பாலம்:
ஓகா நிலப்பரப்பையும், குஜராத்தில் உள்ள பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தாங்கப்படும் பாலமான சுதர்சன் சேதுவை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார். ஓகா- பெய்ட் துவாரகா சிக்னேச்சர் பாலம் என்றும் அழைக்கப்படும் சுதர்சன் சேது, சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.2.5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், புகழ்பெற்ற துவாரகதீஷ் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் மற்றும் யாத்ரீகர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது பார்க்கபப்டுகிறது.
பிரதமர் மோடி பெருமிதம்:
பாலம் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “குஜராத்தின் வளர்ச்சிப் பாதைக்கு இது ஒரு சிறப்பான நாள். ஓகா நிலப்பரப்பையும் பெய்ட் துவாரகாவையும் இணைக்கும் பல திட்டங்களில் சுதர்சன் சேதுவும் உள்ளது. இது ஒரு அற்புதமான திட்டமாகும், இது இணைப்பை மேம்படுத்தும்” என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சுதர்சன் சேது பாலம் தொடர்பான சுவாரஸ்ய தகவல்கள்:
- ஓகா நிலப்பகுதியை பெய்ட் துவாரகா தீவுடன் இணைக்கும் சுதர்சன் சேது, பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுதர்சன் சேது என்பது இந்தியாவின் மிக நீளமான கேபிள்களால் தங்கப்படும் பாலமாகும்.
- நான்கு வழி பாலத்தில் இருபுறமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன.
- நடைபாதையின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் நிறுவப்பட்டு ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
- 2017 அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
- 978 கோடி செலவில் சுதர்சன் சேது பாலம் கட்டப்பட்டது.
- சுதர்சன் சேது பாலத்தின் இருபுறங்களிலும் பகவத் கீதையின் வாசகங்கள் மற்றும் கிருஷ்ணரின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
- துவாரகாவின் பெய்ட்டில் உள்ள துவாரகாதீஷ் கோயிலுக்கு யாத்ரீகர்கள் படகில் மட்டுமே செல்ல வேண்டியிருந்த நிலையில் தற்போது இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது
- Okha-Beyt துவாரகா சிக்னேச்சர் பாலம் சுற்றுலா பயணிகளையும் கவரும்.
குஜராத் எய்ம்ஸ் மருத்துவமனை:
சுதர்சன் சேது பாலத்தை திறப்பது மட்டுமின்றி, குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி ராஜ்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். ராஜ்கோட்டில் இருந்து பிரதமரால் திறந்து வைக்கப்படும் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும். NHAI, இரயில்வே, எரிசக்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் போன்ற பல்வேறு மாநில மற்றும் மத்திய துறைகளின் 48 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார் .