தமிழ்நாடு வரலாற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கி.பி.1636-இல் கட்டிய மஹால், இன்றும் அவரது பெயரில் கம்பீரமாய் நாயக்கர் ஆட்சியின் கட்டடக் கலைக்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது.






 

இத்தாலிய கட்டிட கலைஞரால் வடிவமைக்கப்பட்டு திருமலை நாயக்கரின் ரசணையில் உருவான இந்த பிரமாண்ட மாளிகை, ஆங்கிலேயர் ஆட்சியில் 1860-ல் புதுப்பிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதன் பின் 1971-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, இன்று வரை மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தளித்து வருகிறது.




நூற்றாண்டுகளை கடந்த இந்த வரலாற்று பொக்கிஷம் அதிக அளவிலான மனித வருகையால் சிதிலமடைய துவங்கியது. குறிப்பாக கட்டடத்தை சுமந்து நிற்கும் 58 அடி உயரம் கொண்ட 248 தூண்களும், மேல் மாடமும் சேதம் மற்றும் விரிசல் அடையத்துவங்கின. இதைத் தொடர்து ஆசிய வங்கி உதவியுடன் 3 கோடி ரூபாய் செலவில் திருமலை நாயக்கர் மஹாலை புதுப்பிக்க முடிவு செய்தனர். கொரோனா முதல் அலையின் பொது ஊரடங்கு காரணமாக அப்பணி தாமதமான நிலையில் அதற்கு முன்பாக சிமெண்ட் மூலம் மேற்கொண்ட பணி பலனளிக்காததால், கட்டடம் கட்டப்பட்ட அதே முறையில் புதுப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டது பணிகள் முடிக்கப்பட்டது.




 

இந்நிலையில் பாரம்பரிய கட்டடங்கள், பாரம்பரிய கலைப் பொக்கிஷங்களை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் நவம்பா் 19 முதல் 25- ஆம் தேதி வரை உலக மரபு வார விழா‌ கொண்டாடப்பட்டு வருகிறது. பழங்காலத்தில் நடைபெற்ற கிராம நிர்வாகம், நீதி, தேர்தல் முறை, வேளாண்மை, பாசன முறை, நீர் நிலை பாதுகாப்பு,வரிவிதிப்பு, கோவில் நிர்வாகம் போன்ற செய்திகளை கல்வெட்டுகள் வழியே அறிய முடிகிறது எனவே அவற்றின் பெருமைகளை எடுத்துக் கூறும் வகையில், இந்த மரபு வார விழா கொண்டாடப்படுகிறது. 

 


இந்நிலையில் மதுரையில் உள்ள மிகப்பெரிய வரலாற்று பொக்கிஷமாக இருக்க கூடிய மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கர் மன்னரால் கி.பி. 1636 ஆம் ஆண்டு கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹாலை பொதுமக்கள் பார்வையிட ஒரு வாரத்திற்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் மஹாலை பார்வையிடுவதற்காக குவிந்தனர்



இரவு இரு காட்சிகளாக நடைபெறும் ஒலி-ஒளிக் காட்சியின் மூலம் மதுரை வரலாற்றை தமிழ், ஆங்கிலத்தில் பார்வையாளர்களுக்கு ஒலி ஒளி மூலம்  விளக்கிகாட்டப்படும் இதற்கும் அனுமதி இலவசம். விடுமுறை நாளில் திருமலைநாயக்கர் ஆட்சி செய்த நாயக்கர் மஹாலில் ஏராளமான தொல்லியல் வரலாறுகளையும் ,கட்டிட கலைகளையும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ,சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் திருமலை நாயக்கர் மஹாலுக்கு சென்று ஆர்வமுடன் பார்வையிட்டுவருகின்றனர்