மதுரை  கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க., மாநகர் அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட உள்ள பொதுக்கூட்டங்கள் குறித்தும் கட்சியின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.

 

முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது. ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பயந்து தி.மு.க.வின் 30 அமைச்சர்களையும் முழு நேரமும் பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், 1000, 500 பணம், இறைச்சி என அனைத்தையும் வாரி இறைத்து தி.மு.க. இந்த வெற்றியை பெற்று இருக்கிறது. இதனை சாதாரணமாக கிடைத்த வெற்றி என்று கருத முடியாது.



 

ஜனநாயகம் எவ்வளவு மோசமடைந்து உள்ளது என்பது தி.மு.க. ஆட்சியில் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் ஆணையம் பணியாற்றவில்லை என நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். திருமங்கலம் ஃபார்முலாவை மிஞ்சுமளவிற்கு ஈரோடு கிழக்கில் மக்களை அடைத்து வைத்து தி.மு.க. இதனை செயல்படுத்தி இருந்தது. தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து தி.மு.க. ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்து உள்ளது. ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விஸ்வாசத்துடன் தி.மு.க.  கூட்டணிக்கு வாக்கை செல்லுத்தி உள்ளனர். இதனை தி.மு.க.வினர் ஆகா ஓகோ என்று கொண்டாடக்கூடாது.



 

அ.தி.மு.க. பெரிய வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியை அடைந்தால் கொண்டாடவும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நான்காம் தர பேச்சாளர் என்று கூறியதை வன்மையாக கண்டிக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்று பேசி இருக்கிறார் இது குறித்து எடப்பாடி பழனிசாமி தான் முடிவு எடுப்பார்." இவ்வாறு அவர் கூறினார்.

 

அவரிடம் தினகரன் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பில் நீடித்தால் அ.தி.மு.க. மேலும் பலவீனமடையும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்தார்.