பரமக்குடியில் நேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தொண்டர்களிடம் பேசும்போது. "கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் எதிர்பார்ப்பது பிரச்சாரத்தில் ஜெயலலிதா பெயரை சொல்கிறார்களா? புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சொல்கிறார்களா? என்று தான் உற்று கவனிப்பார்கள். நீங்கள் அதை சொல்ல மறந்தால், அவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வரமுடியவில்லை இதுகுறித்து யாரும் வருத்தப்படவில்லை, யாரும் தூக்கிட்டு செத்து இருக்கிறார்களா? என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இந்நிலையில் அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்
மதுரையில் அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்துகொண்ட பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்," தேர்தலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தாததே தோல்விக்குக் காரணமென அன்வர் ராஜா பேசியிருப்பது தவறான கருத்து. தலைவர்கள் பெயர் இல்லாமல் அதிமுக இல்லை. அன்வர் ராஜா கூறிய கருத்து தவிர்க்கபடவேண்டியது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பெரிதாக வைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் படங்களை சிறிதாக வைத்துத்தான் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதிமுகவின் தோல்வி எதிர்பாராதவிதமானது.
தோல்விக்கு பி.ஜே.பி உள்ளிட்ட தோழமை கட்சிகள் காரணமல்ல. தி.மு.க அரசு கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஆதாரங்களை ஒதுக்கீடு செய்து நகைக்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தடுப்பூசி கூடுதலாக ஒதுக்குவது, தமிழகத்திற்கு நிதி ஆதாரம் கோருவது, மூன்றாம் அலை ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கையை மாநில அரசுடன் இணைந்து செயல்பட வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் பிரதமரை சந்தித்துள்ளனர். ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர் கட்சியாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களின் நலனை முக்கியம் என்ற அடிப்படையில் அதிமுக செயல்படும். மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி சிறுமைப்படுத்தினாலும் மத்திய அரசு தாரளமான முறையில் தடுப்பூசி வழங்கி வருகிறது.
இருபெரும் தலைவர்கள் பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டிற்கு தேவையான தடுப்பூசியைப் நிதி தொடர்பாக கேட்டுள்ளனர். மாநில அரசுக்கு உதவியாக இருக்கும் வகையில் பிரதமரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறார்கள். அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாக இருந்தாலும் மக்களின் நலனுக்காக செயல்படும். நம்முடைய பிரதமர் அருமையான பிரதமர். ஒன்றிய அரசு என சிறுமைப்படுத்தி பேசியும் தமிழகத்திற்கு தரவேண்டிய தடுப்பூசிகளை தட்டுப்பாடின்றி வழங்கிக் கொண்டிருக்கிறார். அதிமுக எந்த ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தாலும் பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு. பொய் வாக்குறுதிகளால் வெற்றி பெற்ற திமுகவை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!