கடந்த 2018 ஜூலை 17 ஆம் தேதி மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ பேசும்போது " வைகை ஆற்றில் இனி கழிவு நீர் கலக்காது. தனி பைப் லைன் மூலம் கழிவு நீரை தூய்மைப் படுத்துவோம். பல்வேறு ஹைடெக்கான வசதிகள் மூலம் செயல்படுத்துவோம். அதனால் வைகை நதி சிட்னி நதிக்கரை போல மாறும் என்றார். 



 

இந்த நிலையில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளையொட்டி மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க அலுவலகத்தில் பெரியார் திருவுருவ படத்திற்கு   முன்னாள்  அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தந்தை பெரியார் தமிழ்நாட்டின் தன்மானத்தை மீட்டெடுத்தவர். பிறப்பால் ஆண் பெண் மட்டுமே என கூறி சாதி ஏற்றத்தாழ்வுகளை களைந்தவர். 95 வயது வரை உடல்நலக்குறைவை பொருட்படுத்தாமல் பட்டிதொட்டி எங்கும் மக்களுக்காக சமூக நீதிக்காக, பெண் விடுதலை, சுயமரியாதை குறித்து விழிப்புணர்வு ஊட்டியவர். அவரது பிறந்தநாளை கொண்டாடுவதில் பெருமை கொள்கிறோம்”



 

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது மூன்று முன்னாள் அமைச்சர்களின் நலனுக்காக செய்யப்பட்டது என நிதியமைச்சர் பி.டி.ஆர் விமர்சனம் செய்து கருத்து தெரிவித்தது குறித்த கேள்விக்கு...

 

நிதியமைச்சரின் பின்புலம் என்னவென்று தெரியும். பொறுப்பான அமைச்சர் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகள் வருவது வரவேற்கத்தக்கது இல்லை. தற்போது ஆட்சி அதிகாரம் நிதித்துறை அவரிடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் பயன்பாடு குறித்து மதுரை மக்களுக்கு தெரியும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 75% பணிகள் மதுரை மத்திய தொகுதியான தற்போதைய நிதியமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. அதுவே முதலில் அவருக்கு தெரியவில்லை. சட்டம் உங்கள் கையில் உள்ளது எவன் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். பொத்தாம் பொதுவாக குறைகூற வேண்டாம். தவறு செய்தால் தயவு தாட்சன்யமின்றி நடவடிக்கை எடுங்கள் என தான் கூறுகிறோம்.



 

அதற்காக திட்டங்களை கொச்சைப்படுத்தி பேசுவது நல்லதல்ல. அ.தி.மு.கவின் திட்டங்களை மறைத்து கொச்சைப்படுத்தி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது தவறு. எங்களை தவறாக பேச வேண்டாம். தொடர்ந்து எங்களையும், அ.தி.மு.க திட்டங்களையும் குற்றம்சாட்டி பேசுவது அழகல்ல.

 

தற்போதைய வணிகவரித்துறை அமைச்சரின் கிழக்கு தொகுதிக்கு 247 கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செய்து கொடுத்துள்ளோம். எதிர்க்கட்சி ஆளுங்கட்சி என்று பார்க்காமல் மதுரை மக்களை நினைத்து திட்டங்களை செய்தோம். தொடர்ந்து என்னிடம் ஸ்மார்ட் சிட்டி குறித்து திடட்ங்களை நோண்டி நோண்டி கேட்க வேண்டாம். பெரியார் பேருந்து நிலையம் தற்போதைக்கு கட்டப்படுவதுதான். இதை நாங்கள் செய்யவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பார்க்காமல் உலக வங்கி நிதி ஒதுக்குவார்களா? ஸ்மார்ட் சிட்டி என் துறை அல்ல. மதுரையின் அமைச்சர் என்ற முறையில் அதனை ஆய்வு செய்தேன். அந்தப்பணிகளை செய்தது யார் என எனக்கு தெரியாது. அதிகாரிகள் தவறு செய்தால் எப்படி உலக வங்கி எப்படி நிதி தருவார்கள். வாய் புளித்தோ மாங்காய் புளித்ததோ என நிதி அமைச்சர் பேசக்கூடாது. முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு என்பது காழ்ப்புணர்ச்சி காரணமாக நடைபெறுகிறது. ஆட்சி மாற்றம் நடந்தால் இப்படித்தான் செய்வார்கள்.



 

எங்கள் மடியில் கனம் இல்லை. அதனால் வழியில் பயம் இல்லை. மதுரையில் எப்போது தேர்தல் நடந்தாலும் தயாராக உள்ளோம். மதுரையில் எந்த திட்டத்திலும் தவறு நடக்கவில்லை. பிறக்கும் சந்ததி கூட நினைக்கும் வகையில் திட்டங்கள் கொண்டு வந்தோம். அது தான் மதுரைக்காரன். எங்களை மட்டும் பார்த்து கேள்வி கேட்கிறீர்கள். அமைச்சர்களிடம் கேள்வி கேட்க தொடை நடுங்குகிறது என பேசினார். ஸ்மார்ட் சிட்டி திட்ட கேள்விகளை தொடர்ச்சியாக செய்தியாளர்கள் கேட்டதால் பதட்டமடைந்த செல்லூர் ராஜூ கோபமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.