ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் ஆடி அமாவாசை அன்று தேனி மாவட்டத்தில் உள்ள சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் வந்து வழிபடுவது வழக்கம்.  இக்கோயிலுக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பிலிருந்தும், தேனி மாவட்டம் வருசநாட்டிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளதால் மூன்று மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கோயிலிலுக்கு சென்று வழிபாடு நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கை எழிலும் நிசப்தமும் ஆழமான அமைதியையும் உண்டாக்கும் இந்த வனப்பகுதியில் கோரக்கர், சட்டைமுனி போன்ற சித்தர்கள் தவம் செய்ததாக நம்பப்படுவதால் ஏராளமானோர் தியானம் செய்வதற்காகவே வருகின்றனர்.




தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தேனி மாவட்டத்தில் ஆடி மாதத்தில் நடக்கும்  ஆடிக்கிருத்திகை,  ஆடிப்பெருக்கு பண்டிகை மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்பணம் செய்யவும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.



இந்த நிலையில் தேனி மாவட்ட மக்கள் வருசநாடு மலை பகுதி வழியாக சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மக்கள் அதிகளவில் செல்வார்கள் என்பதால்,  வருநாடு மலைப்பகுதியில் இருந்து சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையை வனத்துறையினர் அடைத்துள்ளதுடன் தடையை மீறி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.