சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மழை, விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
மீன்பிடித் திருவிழா
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த துவார் கிராமத்தில் உள்ள வள்ளிக் கண்மாயில் மழை வேண்டியும், விவசாயம் தழைக்க வேண்டியும் மீன்பிடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. துவார் கிராமத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என அறிவிப்பு செய்ததை அடுத்து துவார், பூலாங்குறிச்சி, நெற்குப்பை, செவ்வூர் உள்ளிட்ட சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குளக்கரையில் குவிந்தனர். ஆலய வழிபாட்டிற்கு பின் ஊர் பெரியவர்கள் மீன் பிடி திருவிழாவை வெள்ளை விடுதல் எனப்படும் வெள்ளைக்கொடி அசைத்து துவக்கி வைத்தனர். அப்போது மின்னல் வேகத்தில் குளக்கரையில் கையில் மீன்பிடி உபகரணங்களுடன் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன்களை பிடிக்க தொடங்கினர்.
மீன்களை சாக்குப் பையில் அள்ளிச்சென்றனர்
பாரம்பரிய முறையில், வலை, பரி, கச்சா, தூரி ஆகிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களைப் பிடித்த பொதுமக்கள் நாட்டு வகை மீன்களான சிசி, பொட்லா, கட்லா, விரால், சிலேபி, அயிரை, கெண்டை உள்ளிட்ட வகை வகையான மீன்களை சாக்கு பை, கூடை மற்றும் பாத்திரங்களில் அள்ளிச் சென்றனர். வருடந்தோறும் இக்கிராமத்தில் உள்ள இந்த பாசனகண்மாயில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் சூழலில் இந்த மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல் இக் கண்மாயில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடத்திய இந்த மீன்படி திருவிழாவில், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான கிராம பொதுமக்கள் கண்மாயில் மீன்களை பிடித்து மகிழ்ச்சியோடு சென்றனர்.
மகிழ்ச்சியை தரும் மீன்பிடி திருவிழா
இதுகுறித்து மீன்பிடி ஆர்வர்லர் சத்திய சீலன் கூறுகையில், “மீன்பிடித்தல் எல்லாருக்கும் பிடித்த ஒன்று. இது மேலை நாடுகளில் மிகப்பெரும் பொழுது போக்காக இருந்து வருகிறது. இந்த சூழலில் தமிழகத்தில் மீன் பிடித்து திருவிழா மகிழ்ச்சியை தருகிறது. மீன்களை பிடிக்கவில்லை என்றாலும் இங்கு வந்து செல்வதே பிடித்தமான ஒன்று. சாதி - மதங்களை கடந்து இவ்வாறு மீன் பிடிப்பது சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒன்று” என தெரிவித்தார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரூ.4 கோடி பறிமுதல் செய்த விவகாரம்; விசாரித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்