திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறித்த  புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை காங்கிரஸ், பா.ஜ.க வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டது. இதற்கிடையில், பணம் பறிமுதல் தொடர்பாக குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதுமட்டுமின்றி, விசாரணை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. 


ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்ட போது நெல்லை பாஜக வேட்பாளர் நாகேந்திரனின் கார் ஓட்டுநர் சதீஷ் மற்றும் உதவியாளர்களிடம் இருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அனைவருக்கும் தாம்பரம் போலீஸார் சம்மன் அனுப்பினர்.


அதன்படி ஏப்ரல் 22-ம் தேதி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.