தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரையிலிருந்து சென்னைக்கு முதல் முறையாக மெமு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.
தென் மாவட்டங்களில் குவிந்த பொதுமக்கள்
தீபாவளி என்பது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும், நடப்பாண்டில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி வந்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதன்காரணமாக வார இறுதியுடன் சேர்த்து, மொத்தமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அமைந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து மட்டுமே லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் படையெடுத்தனர். தென் மாவட்டங்களில் முக்கிய பகுதியாக விளங்கும் மதுரையில் அதிகளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது.
மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட்
தீபாவளி விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை - சென்னை இடையே முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட மெமு (மெயின் லைன் எலக்ட்ரிக் மல்டிபில் யூனிட் - கழிப்பறை வசதியுடன் கூடிய சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை) ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு இயக்கப்பட இருக்கிறது. அதன்படி மதுரை - தாம்பரம் முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06100) மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) இரவு 07.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
முன்னதாக இந்த ரயில் சேவை (06099) சென்னையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 3) காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை - மதுரை மெமு ரயில் தாம்பரம் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கு வழக்கமான இரண்டாம் வகுப்பு முன்பதிவு இல்லாத பயண கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Ajithkumar: "இணைந்து செயல்படுவோம்" அஜித்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Petrol Diesel Prices: தீபாவளி பரிசு - நாடு முழுவதும் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை? காரணம் என்ன?