ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் இளைஞர்கள் அதிகமானோர் கஞ்சா போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தங்கச்சிமடம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வரும்  நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று இரவு மதுரை-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்த சேது மாணிக்கம் என்பவரை போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார்  வாகனத்தை  சோதனை செய்தபோது இரு சக்கர  வாகனத்தில் 11 கஞ்சா பெட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது.




இது குறித்து  வாகனத்தை ஓட்டி வந்த சேது மாணிக்கத்திடம்  விசாரித்ததில் மதுரையில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து வீட்டில் வைத்து பின் தங்கச்சிமடம் நகர் பகுதியில்  சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்தார். உடனடியாக போலீசார் சேது மாணிக்கம்  வீட்டிற்கு சென்று வீட்டை  சோதனை  செய்தபோது வீட்டின் பின்புறம் பயன்படுத்த முடியாமல் முற்றிலும் துருப்பிடித்த நிலையில் இரட்டை குழல் நாட்டு கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. கைத்துப்பாக்கி குறித்து சேது மாணிக்கத்திடம்  போலீசார் விசாரித்த போது  10 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இந்த கைத்துப்பாக்கி கிடைத்ததாகவும் அதனை எடுத்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.




சேது மாணிக்கத்திடம் இருந்து கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கி கைப்பற்றப்ட்டதால் அவரிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகார்கள் விசாரணை நடத்தினர்.கைது செய்யப்பட்ட சேது மாணிக்கம் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து  தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் வைத்து துப்பாக்கி மற்றும் கஞ்சா குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேது மாணிக்கம்  சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடும் ரவுடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மொத்தம் உள்ள 42 காவல் நிலையங்களில் 504 ரவுடிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.




இவர்களில் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் , 271 ரவுடிகள் மீது சரித்திர பதிவேடு துவக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது . மீதமுள்ள ரவுடிகள் மீது சரித்திர பதிவேடு தொடங்கி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் , 23.09.2021 முதல் மேற்படி ரவுடிகள் மீதான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது . இதில் , 235 ரவுடிகளை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரித்து அனுப்பப்பட்டது . மேலும், சோதனையின்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்த 10 ரவுடிகள் மீது 3 வழக்குகள் பதிவு செய்து, 26 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.





மேலும், கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட மற்றும் திட்டம் தீட்டிய 18 ரவுடிகள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ரவுடிகளிடமிருந்து, 306 வாள், அருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடத்தில் ஒரு கஞ்சா அவரிடம் கை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சமின்றி வாழ  மாவட்டம் முழுவதிலும் கஞ்சா விற்பனை செய்து வரும் ரவுடிகளை கண்டறிந்து  அவர்கள் வைத்திருக்கும் பயங்கர ஆயுதங்களை  பறிமுதல் செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.