மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு செய்ததாக மருத்துவமனை டீனிடம் பெண்ணின் உறவினர்கள் பரபரப்பு புகார் அளித்தனர்.

 

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான மருத்துவமனையாக விளங்க கூடிய  மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில் பிரசவித்த பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு செய்தது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




 

மதுரை மேலூர் முகம்மதியாபுரம் பகுதியை சேர்ந்த அப்சர் உசேன் என்பவரது மனைவி ஆஷிசாபானு என்ற பெண் நேற்று இரவு பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில  இன்று அதிகாலை 5 மணிக்கு அறுவைசிகிச்சை மூலமாக குழந்தை பிறந்த நிலையில் தொடர்ச்சியாக ஆஷிசாபானுவின் சம்மதம் கேட்காமலேயே குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க கோரி மருத்துவமனை டீனிடம் பெண்ணின் உறவினர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.



 

இது குறித்து பேசிய உறவினர்கள், ”பெண்ணின் அனுமதியின்றி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த மருத்துவகுழுவினர் மீது உரிய விசாரணை எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையெனில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்” என தெரிவித்தனர். 

 

இந்த குற்றச்சாட்டு குறித்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்னவேல் பேசியபோது :

ஆசிபா பானுவின் கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில்  இருந்ததால் மருத்துவர்கள் ஆலோசித்து இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில் சின்ன கம்யூனிகேசன் பிரேக் இருந்தது, இருந்தாலும் குழந்தையை காப்பாற்ற இந்த அறுவை சிகிச்சை தான் நல்ல முடிவு எனவும் இதன்மூலம் இனி குழந்தை பிறக்காது. இருப்பினும் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது என்றார்.