பொய்யான புகாரின் பேரில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


மதுரை மானகிரியை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார்,  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலம் பகுதியில் 12 பேர் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இதுதொடர்பாக திருமங்கலம் நகர் போலீசில் புகார் அளித்தோம். ஆனால் குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  நீதிமன்ற உத்தரவின் பேரில் 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் சாட்சிகளை எதிர் தரப்பினர் மிரட்டி வந்தனர். இதுதொடர்பாக அந்த சாட்சிகள் போலீசில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 


இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்களால் தொடர்ந்து சாட்சிகள் மிரட்டப்பட்டு வந்தனர். மேலும் எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரின் பேரில் சம்பவ இடத்தில் இல்லாத என் மீது வழக்கு பதிவு செய்தனர். எனவே குற்றச் செயல்களில் புரிந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டு,  வழக்கை ஒத்தி வைத்தார்.


 




மற்றொரு வழக்கு

 

கடந்த ஆண்டு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்த சேதுராமன் முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். கடலாடி தாலுகா, ஆப்பனூர் அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிட மராமத்து பணிக்கான செலவுத்தொகை ரூ.35 ஆயிரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனுதாரர் வழங்கியுள்ளதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன். கடந்த ஆண்டு சட்டவிரோதமாக மணல் கடத்தியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சேதுராமன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், கடலாடி தாலுகா, ஆப்பனூர் அரசு தொடக்கப்பள்ளியின் கட்டிடம் மராமத்து பணிக்கான செலவுத்தொகை ரூ.35 ஆயிரத்தை பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனுதாரர் வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார். பின்னர்  நீதிபதி, மனுதாரருக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.