மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "சட்டமன்றத்தில் ஆளும் கட்சிக்கு துதி பாடுபவர்களுக்கு மட்டுமே மரியாதை தரப்படுகிறது. மக்கள் பிரச்னைகளை சட்டமன்றத்தில் பேச முடியவில்லை. முதல்வர் பேசும் போது அ.தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து வருகிறோம். எதிர்க்கட்சி தலைவர் பேசினால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கண்ணியம் காப்பதில்லை. சட்டமன்றம் ஜனநாயகம் முறையில் நடைபெறவில்லை. 4 துறை சார்ந்த மானிய கோரிக்கைகள் 15 நிமிடங்கள் மட்டுமே நடக்கிறது.



தி.மு.க., என்பது ரவுடி கட்சி, தி.மு.கவில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. சபாநாயகர் சட்டமன்றத்தில் வாத்தியார் போல நடந்து கொள்கிறார். சட்டப்பேரவைத் தலைவர் போல நடந்து கொள்வதில்லை, அ.தி.மு.கவில் ஒ.பி.எஸ் இணைத்து கொள்வது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க.வில் முடிவு எடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி அப்போதே அதிமுகவுக்கு திரும்பி வந்திருக்க வேண்டும். அதிமுகவை எதிர்ப்பது திமுகவுக்கே சாதகமாக அமையும். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் மென்மையான போக்கை கடைபிடிக்கவில்லை.



எம்.ஜி.ஆர் போல எடப்பாடி பழனிச்சாமி முழுமையாக திமுகவை எதிர்த்தார், சித்திரை திருவிழாவை ஒளிப்பதிவு செய்ய 1 மணி நேரத்திற்கு 40,000 கட்டணம் நிர்ணயம் செய்து இருப்பது கண்டனத்துக்குரியது, 12 மணி நேர வேலை சட்ட மசோதாவுக்காக நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர்கள் திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள், அதிமுக ஆட்சி காலத்தில் மசோதவை நிறைவேற்ற மத்திய அரசு கூறியது, எடப்பாடி பழனிச்சாமி மசோதாவை நிறைவேற்றவில்லை" என கூறினார்.