முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்..,”தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மக்கள் விரோத ஆட்சியிலே முல்லைப் பெரியாறு, காவேரி ,செய்யாறு சிப்காட், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் கால்வாய், 58 கால்வாய் என்று திரும்பிய திசை என்றும் தமிழகத்திலே விவசாயிகள் ஒரு தொடர் போராட்டமாக நடைபெற்று வருகிறது. இதை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விவசாயிகள் அபய குரலை  செவிகொடுத்து கேட்பதற்கு முதலமைச்சருக்கு நேரமில்லை, அவருக்கு இருக்கிற நேரமெல்லாம் தன் பெற்றெடுத்த தவப்புதல்வன் உதயநிதி ஸ்டாலினை மகுடம் சூடுவதற்கு விழாக்களை எடுப்பதிலே அவர் தன்னுடைய நேரத்தையும், கவனத்தையும் முழுமையாக அர்ப்பணித்து வருகின்ற காரணத்தினால், விவசாயிகள் எழுப்புகிற அபாய குரல் முதலமைச்சருடைய காதுகளில் சென்று சேரவில்லை, சென்று சேர்ந்தாலும் அதை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை, அப்படி அவர் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் அதற்கு அக்கறை செலுத்தவில்லை, ஆகவே தான் விவசாயகளின் போராட்டம் நாடெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.




முதலமைச்சருடைய நடவடிக்கைகளை நாம் பார்க்கிற போது நாடு பற்றி எரிகிற போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல, விவசாயிகளின் போராட்டம் காட்டுதீயாக பற்றி எரிந்து கொண்டிருக்கிற போது, தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீரை பெற்று தரவும் முயற்சி எடுக்கவில்லை. எடப்பாடியார் கொண்டு வந்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் என்னவென்று தெரியவில்லை? நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு மூடு விழாவை திமுக அரசு நடத்தி விட்டது. மீத்தேன்,ஈத்தேன் நிலக்கரி சுரங்கம் போன்றவற்றில் இருந்து காப்பாற்ற டெல்டா பகுதிகளில் சிறப்பு வேளாண் மண்டலத்தை உருவாக்கினார். அதேபோல் நூறாண்டு திட்டமான காவேரி வைகை குண்டாறு திட்டத்தினை 14,400 கோடி அளவில் தொடங்கி வைத்து, இந்த திட்டத்தை துவக்கி வைக்கிற பாக்கியத்தை நான் பெற்றதிலேயே என் பிறவிபயனை அடைந்தேன் என்று எடப்பாடியார் கூறினார்.





குடி மாராமத்து திட்டத்தின் மூலம் 1132 கோடியிலே, 5586 நீர்நிலைகள் தூர்வாரினார் நதிநீர் இணைப்பு திட்டமாக இருந்தாலும், நீர்நிலைகளை பாதுகாப்பதாக இருந்தாலும், நீர் நிலைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாக இருந்தாலும் தானும் ஒரு விவசாயி என்பதிலே விவசாயம் மீது தனி அக்கறை செலுத்தினார். அணைகளிலிருந்து  உரிய நேரத்தில் நீரை திறந்து  பாசன பரப்பளவில் முழுமையாக 100% பயிர் செய்ய முடிந்தது விளைச்சலை காண முடிந்தது. ஆனால் இன்றைக்கு இருக்கிற திமுக அரசு கும்பகர்ண தூக்கத்திலே, கோமா நிலையில் இருக்கக்கூடிய அரசாக உள்ளது. டெல்டா மாவட்டம், தென் மாவட்டம் என அந்த விவசாயிகள் இன்றைக்கு கண்ணீர் வடிக்கின்ற ஒரு நிலையை  உருவாக்கி இருக்கிறார்கள் இதை நாம் எங்கே முறையிடுவது? தண்ணீரை திறந்து விட கூட இந்த முதலமைச்சருக்கு மனமும் இல்லை, நேரமில்லை, மக்கள் மீது அக்கறை இல்லை, விவசாயிகள் மீது கருணை இல்லை என்ற ஒரு நிலையை பார்க்கிற போது இப்படிப்பட்ட ஒரு முதலமைச்சர் இந்த நாடு இதுவரை சந்தித்ததில்லை.




 வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என்பதை இங்கே ஒரு தொடர் வேதனை நிகழ்வாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிற போது இந்த ஆட்சியில் தொடர் சம்பவங்களாக  விவசாயிகள் இன்றைக்கு தங்களுக்கு பெற்றுத் தர வேண்டிய தண்ணீரை கொடுக்கவும் மறுக்கிறார், பெற்று தரமறுக்கிறார் ஒரு கொடுங்கோல் அரசாக, மக்கள் விரோத அரசாக, சர்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டிலே திரும்பி திசையெல்லாம் இன்றைக்கு செய்யார் சிப்காட்டில் இருந்து முல்லை பெரியார், திருமங்கலம் பிரதான கால்வாய், 58 கால்வாய், மேலூர் கால்வாய் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீரை தாருங்கள் என்று கண்ணீரோடு விவசாயிகள் போராடி வருகிறார்கள் ஆனால் விவசாயிகள் மீது மீது அக்கறை செலுத்துவதற்கு அரசுக்கு மனம் வரவில்லை” என கூறினார்.