ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 66-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3 டி.ஐ.ஜிகள், 25 போலீஸ் சூப்பிரண்டுகள், 31 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 71 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 124 காவல் ஆய்வாளர்கள் என 6 ஆயிரம் 526 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.  161 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளது.



 

இம்மானுவேல் சேகரன் நினைவு நினைவிடம், பேருந்து நிலையம், ஐந்து முனை, சந்தை திடல் உள்ளிட்ட இடங்கள் 25 இடங்களில் 115 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் 67 இடங்களில் வீடியோ கேமராக்கள் மூலம் வாகனங்களில் வருபவர்கள், வாகனங்களில் இருப்பவர்கள் பதிவு செய்து கண்காணிக்கப்பட உள்ளனர். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நிரந்தர புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நினைவிடம் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் 7 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை - ராமநாதபுரம் நான்கு வழி சாலை உட்பட மாவட்டம் முழுவதும் 42 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த வருபவர்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே வந்து சொல்ல வேண்டும். பரமக்குடி நகர் முழுவதும் டிரோன் கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் பரமக்குடி நகர் முழுவதும் கொண்டு வரப்பட்டுள்ளது.



 

அதே போல் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபான கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இன்று சட்டம் ஒழுங்குப் பிரச்னையை பாதுகாக்கவும் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டும் மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்படும் என்றும். இன்று மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்கள் அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.