தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் கட்டாயத் தேர்ச்சி என்ற அடிப்படையில் இப்போதைய பாடத் திட்டம் செயல்பட்டு வருவதால், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலை கேள்வி குறியாகவே உள்ளது எனலாம்.
இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முறையாக கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. எனவே மாணவர்கள் இந்த கொரோனா காலத்தை வீணற்ற முறையில் செலவழிக்க கூடாது என்பதற்காக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அமைந்துள்ளது கோகிலாபுரம் என்னும் கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த ஊரில் அரசு உதவி பெரும் பெரிய அளவிலான பள்ளிகள் இருப்பதால், இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை சற்று குறைந்தே உள்ளது. தற்போது இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, ஒரு மாணவருக்கு ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் தினமும் 4 முதல் 5 மாணவர்களை சந்தித்து பாடம் நடத்தி வருகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்திவருவது மாணவர்களின் பெற்றோர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
இதுகுறித்து அப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், " கொரோனா காலத்தால் மாணவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளது. தொடக்கப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்தால் மட்டுமே அவர்களுக்கான எழுத்துப் பயிற்சி, வாசித்தல் பயிற்சி தொடர்ச்சியாக கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் எப்போது பள்ளிக்கு வருவார்கள் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. எனவே மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி கற்பது பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்களே அவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பாடம் நடத்தி வருகின்றோம். மேலும் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வழியாகவும் தினமும் படம் எடுத்து வருகிறது.
அதை நினைவுபடுத்தும் வகையில் மாணவர்களின் வீடுகளில் உள்ள தொலைக்காட்சிக்கு அருகில் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்கள் மற்றும் அவற்றிற்கான நேரங்கள் குறித்த அட்டவணையை ஒட்டி வருகிறோம். இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர்கள் உரிய நேரத்தில் மாணவர்களை கல்வி தொலைக்காட்சியை பார்க்க வைக்கிறார்கள். மேலும் எங்களது ஆசிரியர்கள் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலமும் மாணவர்களை கல்வி கற்க வைத்து வருகிறார்கள். இதற்கு பெற்றோர்களின் முழு ஒத்துழைப்பே நாங்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வருவதற்கு சாத்தியமாக திகழ்கிறது" என்றனர்