பழனி நகராட்சி நூற்றாண்டு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். அரசு பள்ளியில் உள்ள பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தப்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை கொடுப்பதில் தாமதம் செய்வதாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி , கல்வித் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக பழனி முருகன் கோயிலுக்கு சென்ற கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சாமி தரிசனம் செய்தார். பின்னர் போகர் சன்னதியில் வழிபட்டார். பழனி கோயிலுக்கு வருகை தந்த அமைச்சரை பழனி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து வரவேற்று பிரசாதங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழக முதல்வர் கொண்டுவந்துள்ள திட்டங்களின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
பின்னார் செய்தியாளரிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு பள்ளிகளில் பல ஆண்டுகளாக பணியாற்றக்கூடிய ஓவிய ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் உள்ளிட்டோரை நிரந்தரமாக பணிக்கு அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துவரப்படுவதாகவும், அதற்கான ஆலோசனைகள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆர்டிஐயில் தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் வசூல் செய்யப்பட்டிருந்தால் அதனை திருப்பிக் கொடுக்க அரசு அறிவுறுத்தி உள்ளது அதன்படி பல தனியார் பள்ளிகள் பணத்தை திருப்பி கொடுத்து வருகின்றன.
இந்தக் குழப்பத்திற்கு ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை குறிப்பிட்ட காலத்தில் கொடுக்காதது தான் காரணம் என அமைச்சர் குற்றம் சாட்டினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையில் கையெப்பமிட்டால் மட்டுமே நிதி கொடுக்கப்படும் என கூறிய காரணத்தில் தான் இது போன்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.