கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல டிடிவி காத்திருக்கிறார். கடலும் வற்றாது, டிடிவியினால் கருவாடும் தின்ன முடியாது - மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
அதிமுக கூட்டணி பற்றி தினகரன் பேச வேண்டிய அவசியமில்லை
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில்..,” அதிமுகவால் பதவி பெற்றோம் உயர்ந்தோம் என்பதை மறந்து தினகரன் அழித்து விடுவேன், ஒழித்து விடுவேன் என பேசி குட்டிக்கரணம் போட்டு பார்க்கிறார். தினகரன் என்ன வேலை செய்தாலும் இனி தமிழகத்தில் இடமில்லை என மக்கள் முடிவெடுத்து விட்டார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி உறுதியானது. அதிமுக கூட்டணி பற்றி அரைவேக்காட்டு அண்ணன் தினகரன் அவசரவசரமாக ஏதேதோ பேசி திருப்தி அடைகிறார். அதிமுக கூட்டணி பற்றி தினகரன் பேச வேண்டிய அவசியமில்லை. சம்மன் இல்லாமல் ஆஜராகிறார். அரசியல் மரபு இலக்கணம் இல்லாத தலைவர் தினகரன்.
அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.
கொடநாடு வழக்கில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் கொடநாடு வழக்கு எனச்சொல்லி தினகரன் எத்தனை நாள் பூச்சாண்டி காட்டுவீர்கள். கொடநாடு கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-வசம் ஒப்படைக்கலாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப்பட்ட பொய் வழக்குகளில் அவர் நிரபராதி என நிரூபணமாகி உள்ளது. தேர்தல் காலங்களில் கொடநாடு கொலை வழக்கு குறித்து பேசி வருகிறார்கள். ஜெயலலிதா டிடிவி.தினகரனை தனது பிள்ளை போல வளர்த்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்து விட்டார். டிடிவி எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அரசியல் வாழ்வில் வெற்றி பெற முடியாது. டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும். கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என காத்திருக்கும் கொக்கு போல டிடிவி காத்திருக்கிறார். கடலும் வற்றாது, டிடிவியினால் கருவாடும் தின்ன முடியாது. அதிமுகவிலிருந்து பதவி சுகத்தை அனுபவித்து விட்டு திமுகவுக்கு செல்பவர்கள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
அதிமுக - பாஜக வின் இணக்கமான பயணத்தை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை
அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் குறித்து நாம் பேச தேவையில்லை. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து நயினார் நாகேந்திரன் தெளிவாக விளக்கம் கூறி விட்டார். ஒபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், அவரின் கருத்துக்கு பதில் கருத்து சொல்ல தேவையில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் திமுக அட்டை போல ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்ளும், அதிமுக - பாஜக வின் இணக்கமான பயணத்தை திமுகவால் பொறுத்து கொள்ள முடியவில்லை, திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் கள்ள மவுனம் காக்கிறார்கள்.