திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலக அமலாக்க அதிகாரி கபிலன் 55 தனியார் நிறுவனத்திடம் இருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய போது சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.




மத்திய அரசின் ஆத்மநிர்பர் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம், நிதி பங்களிப்பு வழங்குகிறது. திருநெல்வேலியை சேர்ந்த இன்னோவேடிவ் எனும் ஐடி நிறுவனத்திற்கு ஏ பி ஆர் ஒய் திட்டத்தின் மூலம் 3 கோடி ரூபாய் நிதி கிடைத்துள்ளது. திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரியாக பணியாற்றும் கபிலன் (55) என்பவர் அந்த நிறுவனத்தின் ஆவணங்களை பரிசோதித்து பார்த்து, 3 கோடி ரூபாய்க்கு 5 சதவீதம் கமிஷனாக 15 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.




இதுகுறித்து தனியார் நிறுவன நிர்வாகி மதுரையில் உள்ள சிபிஐ அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். புகார் அடிப்படையில் மாலையில் அதிகாரிகள் திருநெல்வேலி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் காத்திருந்தனர். அங்கு 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அதிகாரி கபிலனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரது பணியிடத்திலும் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் விசாரணைக்கு மதுரை அழைத்துச் சென்றனர்.