தேனி மாவட்டம் தமிழக, கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது முல்லைப் பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காகவும், விவசாய நிலங்களுக்கான பாசன வசதிகளுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்காக 14 ஆயிரத்து 707 ஏக்கருக்கு 200 கன அடி நீரும், தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீரும் என பெரியாறு அணையில் இருந்து 120 நாட்களுக்கு தினசரி 300 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தேனியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்வரத்து முற்றிலும் தடைபட்டதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைந்தது. சில நேரங்களில் நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் இன்றி பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த மாதம் இதே நாட்களான 29, 30 ஆகிய தேதிகளில் அணையின் நீர் வரத்து இன்றி காணப்பட்ட நிலையில் இன்று அணையின் நீர்வரத்து 1227 கன அடியாக உயர்ந்தது தற்போது அணையில் 124.10 அடி நீர் உள்ளது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 1333 கன அடி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை: விழுப்புரம் அருகே 3 இளைஞர்களுக்கு சாகும் வரை சிறை!
வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும் இதுபோல் மழை தொடர்ந்து பெய்து வந்தால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் தடை இன்றி வரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். குறிப்பாக முல்லை பெரியாறு அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1333 கன அடிக்கு மேல் நீரானது திறந்து விடப்படுவதால் தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கம்பம் , கூடலூர் முதல் முல்லை பெரியாறு ஆற்று பகுதிகளை ஒட்டியுள்ள கரையோரங்களில் ஆற்றில் குளிக்கவோ , இறங்கவோ கால் நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்க கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.