ரயில்வே துறையில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளர், தொழில்நுட்ப உதவியாளர் போன்ற பதவிகளுக்கான காலியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இந்த பதவிகளுக்கான தகுதியான நபர்களை தேர்வு செய்ய ரயில்வே தேர்வாணையம் தேர்வுகளை கணினி வாயிலாக நடத்தி வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்வுகள் முடிவடைந்து தற்போது நான்காம் கட்ட தேர்வுகள் செப்டம்பர் 19 முதல் நடந்து வருகின்றது.




 

இந்த தேர்வுகள் 12 மண்டலங்களில் ஒரு கோடிக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த தேர்வுகளை நடத்த அனுபவம் வாய்ந்த நம்பிக்கையான ஒரு பெரிய நிறுவனத்தை ரயில்வே தேர்வாணையம் நியமித்துள்ளது. இந்த தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தடுப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் கணிப்பொறிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முறைகேடுகளை தவிர்க்க விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையம், தேர்வு அறை, இருக்கை ஒதுக்குவது போன்றவற்றில் வரிசைக்கிரமம் தவிர்க்கப்பட்டுள்ளது. கேள்வித்தாளை வேறு எவரும் அணுகாத வண்ணம் 256 அளவு இலக்க கம்பியூட்டர் குறியீட்டில் கணினியில் சேமிக்கப்படுகிறது.



கேள்வித்தாளில் கேள்விகள் மற்றும் அதற்கான  நான்கு விருப்ப  விடைகள் ஆகியவையும் வரிசைக்கிரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு தேர்வருக்கும் வரிசைக்கிரமம் இல்லாத கேள்விதாள்கள் அவர்களது கணிப்பொறியியல் தோன்றும். எனவே தேர்வுக்கான விடைகளை யாராலும் வழங்க முடியாது. அப்படி யாராவது கூறினால், அது பொய் ஆதாரமற்றது மற்றும் தவறாக வழி நடத்துவதாகும். மேலும் தேர்வுகள் நடக்கும்போது வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

 



ரயில்வே ஊழியர்கள்  கண்காணிப்பில் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஆள் மாறாட்டத்தை தவிர்க்க ஆதார் அட்டையுடன் கூடிய கைரேகை சோதனையும் நடத்தப்படுகிறது. மேம்பட்ட கண்காணிப்பின் வாயிலாக செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற  தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட 108 பேர் மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் நேர்மையான முறையில் நடைபெற்று வருகிறது. எனவே குறுக்கு வழியில் ரயில்வே வேலை வாங்கித் தருவதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என ரயில்வே தேர்வு ஆணையம் எச்சரித்துள்ளது.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர