உடல் உறுப்பு தானம் செய்வது மகத்தான செயலாக பார்க்கப்படுகிறது. உயிர் என்பது விலை மதிப்பற்ற ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பல நேரங்களில் சரியான உடல் உறுப்பு கிடைக்காததால் உயிரிழப்புகள் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வது குறித்து பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக பாராட்டை பெற்று வருகிறது. கடந்த மாதம், சிறந்த உடல் உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்புக்கான விருதை தமிழ்நாடு பெற்றது. தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு, அந்த விருதை வழங்கியிருந்தது.
இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.
அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே குன்னுத்துபட்டியை சேர்ந்த பூ விவசாயி வேலுச்சாமி நேற்று முன்தினம் இரு சக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலுச்சாமி மூளை சாவு அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் வேலுச்சாமியின் உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதற்கு முன் வந்தனர் .
இதனை அடுத்து வேலுச்சாமியின் உடல் உறுப்புகள் சிகிச்சையில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு தானமாக வழங்கப்பட்டது . உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் உடல் குன்னுத்து பட்டி மயானத்துக்கு கொண்டுவரப்பட்டது. தமிழக அரசு அறிவித்தபடி அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வட்டாட்சியர் தனுஷ்கோடி, டி எஸ் பி முருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை வழங்கி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது . உடல் உறுப்பு தானம் செய்த வேலுச்சாமியின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஆறுதல் தெரிவித்து நன்றி கூறினார் .