சுங்கிடி சேலை என்றாலே உடனே சட்டென்று நினைவுக்கு வருவது திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சுங்கிடி சேலைதான். பண்பாட்டு விழாக்கள், பண்டிகை நாட்கள் என்றாலே பெண்மை போற்றும் ஆடை என்பது சேலைதான். சில்க் காட்டன், சம்பல்புரி காட்டன், பெங்கால் காட்டன், நீலாம்பரி போன்றவை கண்ணைக் கவரும் வகையில் வந்தாலும், கலாச்சாரத்தை தாங்கி நிற்கும் சுங்கிடி சேலைகளுக்கும் கண்டாங்கி சேலைகளுக்கும் எப்போதுமே தனி மவுசு உண்டு. திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் சுங்கிடி பட்டு சேலையும், கண்டாங்கி சேலையும் வெளிநாடுகளிலும் புகழ் சேர்த்தது, பேன்சி சேலைகளுக்கு போட்டியாக, பொருளாதாரத்தை பாதிக்காத, உள்நாட்டு உற்பத்தி பொருளாக உருவெடுத்த பெருமையும் இதற்கு உண்டு.
ஆங்கிலேயர் காலத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் மேற்கொண்டு வந்த சுங்கிடி உற்பத்தி, 8 ஆண்டுகளுக்கு முன்பு வரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் ஜீவாதார தொழிலாக இருந்தது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் மூலம், தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள், கொல்கத்தா ஜவுளி மார்க்கெட்டுக்கு அனுப்பப்பட்டன. அங்கிருந்து பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனையாகின.
சின்னாளப்பட்டியில் சாயமேற்றுதல் நடந்தபோது தரம், வண்ணம், வேலைப்பாடு நுட்பம் போன்றவற்றால் மவுசு நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்ற உத்தரவால் சாயப்பட்டறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூடியது. இதையடுத்து ஜவுளி நிறுவனங்கள், நெசவு தொழிலாளர்கள், சாயமேற்றுதல், கஞ்சிப்பசை நிறுவனத்தினர், அவற்றின் தொழிலாளர்கள் மட்டுமின்றி உலர்த்தல், துணி தேய்த்தல் தொழிலில் ஈடுபட்டோர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். பாதி பேர் வேறு வேலை தேடி பிற இடங்களுக்குச் சென்று விட்டனர்.
மீதியுள்ளவர்கள் பணியை தொடர்ந்தாலும் வருமான வாய்ப்பு குறைந்திருந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி சுங்குடி சேலைகள் தயாரிப்பு பணியில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர் தொழிலாளர்கள். மதுரை , கோயம்பத்தூர் என பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆர்டர்கள் தற்போது அதிகமாக வருவதால் சேலை தயாரிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.