நேபாளத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 3) இரவு ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 128 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 100 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ருக்கும் பகுதியில் சுமார் 60 பேரும், ஜாஜர் கோட் பகுதியில் 60 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் காயமடைந்தோருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


மேலும், நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி-தேசிய தலைநகர் மண்டலம் (என்சிஆர்) மற்றும் வட இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.






நேபாளம், டெல்லி - என்சிஆர், அயோத்தி, பாட்னா, கான்பூர் மற்றும் ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடக்குப் பகுதிகளில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலநடுக்கம் உணரப்பட்டது. 





கர்னாலி மாகாணத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் இரவு 11:47 மணிக்கு (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டதாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.




நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் 10 கிமீ ஆழத்திலும், அயோத்தியிலிருந்து வடக்கே 227 கிமீ தொலைவிலும், காத்மாண்டுவிலிருந்து மேற்கு-வடமேற்கில் 331 கிமீ தொலைவிலும் இருந்தது.







முன்னதாக கடந்த அக்டோபர் 22ம் தேதி நேபாளத்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி - என்சிஆர் பகுதியிலும் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


பிரதமர் மோடி ட்வீட்: 






நேபாள மக்களுடன் இந்தியா ஒன்றாக நிற்கிறது. நேபாள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. எங்கள் எண்ணங்கள் இறந்த குடும்பங்களுடன் உள்ளன, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.