கோயில் நகரம் பண்பாட்டுத் தளம் தூங்கா நகரம் என சிறப்பு பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவும் மிகப்பெரிய அடையாளமாக இருந்து வருகிறது புகழ்பெற்ற சித்திரை திருவிழா கடந்த இரண்டு ஆண்டுகளாக பக்தர்கள் இல்லாமல் ஒரு விழாவாக நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்ட நிகழ்வும் நடைபெற்றது.  இந்நிலையில் மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 




இந்த வைபவம் நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.




இந்நிலையில் இது குறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ராஜன் நம்மிடம் பேசினார்..” ’மதுரையில் ஸ்மார்ட் சிட்டித் திட்டத்தில் வைகை ஆற்றின் கரையில் சுவர்கள் எழுப்ப பட்டுள்ளது. அழகர் இறங்கும் இடத்தில் அந்த பாதை அமைந்துள்ளது வழியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முடியும். ஆற்றின் மற்ற பகுதிகளில் இருந்து வர வாய்ப்பு இல்லாததால் உள்ளே வந்தவர்கள் போக மற்ற நபர்கள் ஆற்றின் எதிர்பக்கம் இருந்து சுவற்றில் ஏறி குதித்து உள்ளே வர முயற்சி செய்வார்கள். எனவே ஆற்றின் தென்கரையில் தற்காலிக பாதை அமைத்து அனைவரும் எளிதில் செல்ல வழி வகை செய்ய வேண்டும். ஆற்றில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன அதனை உடனடியாக மூட வேண்டும்.


வி.ஐ.பிக்காக திருவிழா இல்லை. எளிய மக்கள் தரிசிக்கவே இது போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. வி.ஐ.பிக்காக பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை விரட்டி அடிக்க கூடாது’ - உள்ள அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியரிடம்   வைகை நதி மக்கள் இயக்கம் திருவிழாவிற்கு முன்பே கோரிக்கைவிடுத்தது. ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகம் செவிகொடுக்கவில்லை.




இந்நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் சமயத்தில் இப்படியான கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. அதிகாரிகள் முன்னேற்பாடுகளை முறையாக செய்திருந்தால்  பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எனவே வரும் காலங்களில் எங்களை போன்ற இயக்கங்களின் கருத்துக்களை அலட்சியப்படுத்தாமல் எங்களின் கருத்தையும் எடுத்துக் கொண்டு பரிசீலனை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.