மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு வரும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலை பராமரிப்பிற்காக தோண்டப்பட்ட குழியை விரைவாக மூடக்கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
மதுரை கேகே நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் வேதவல்லி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை நகர் பகுதி, கேகே நகர் மாட்டுத்தாவணி வழி தேசிய போக்குவரத்து நெடுஞ்சாலை பகுதியில் சாலை சீரமைப்பு, மற்றும் வடிகால்கள் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் குழி மூடப்படாத நிலையில் உள்ளது. தற்போது மழை காலமாக இருப்பதால் மழைநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ளது. அதோடு வாகனத்தில் செல்பவர்களுக்கும் பாதசாரிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உயர்நீதிமன்றத்திற்கு வர இந்த சாலையை பயன்படுத்தும் நிலையில் உள்ளது. ஆகவே பெரும் அசம்பாவிதம் நிகழும் முன்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு வரும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சாலை பராமரிப்பிற்காக தோண்டப்பட்ட குழியை விரைவாக மூட உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், " நான்கு வாரங்களுக்குள்ளாக பணிகள் நிறைவடைந்து விடும் என தெரிவித்தனர். இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்
மற்றொரு வழக்கு
மதுரை, திருமங்கலம், சாத்தங்குடி ஊரணி பகுதியில் அரசின் இணையதள மையம் மற்றும் டவர் கட்டிடத்தை அமைக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைத்து உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டது
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சுகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தங்குடி கிராமம் சர்வே எண் 91/1 நீர் பிடிப்பு ஊரணி பகுதியாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டிலேயே அரசு கட்டிடம் ஒன்றை கட்டுவதற்காக முடிவெடுக்கப்பட்ட போது நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே இடத்தில் அரசின் இணையதள மையம் மற்றும் டவர் கட்டிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை திட்டமிட்டபடி அங்கு கட்டிடம் கட்டப்பட்டால், அதிக மழை பெய்யும் காலங்களில் அலுவலகத்திற்கு செல்ல மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, கட்டிடத்தின் உறுதி தன்மையும் விரைவில் குறையும். இதே பகுதியில் நீர் பிடிப்பு அல்லாத அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த இடத்தில் இந்த கட்டிடத்தை கட்டினால் அரசுக்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கும் பயனுள்ள விதமாக அமையும். ஆகவே சாத்தங்குடி நீர் பிடிப்பு பகுதியில் அரசின் இணையதள மையம் மற்றும் டவர் கட்டிடத்தை அமைக்க கூடாது என முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே திருமங்கலம், சாத்தங்குடி ஊரணி பகுதியில் அரசின் இணையதள மையம் மற்றும் டவர் கட்டிடத்தை அமைக்க கூடாது என உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் சத்தியநாரயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணக்கு வந்தது. அரசு தரப்பில் மனுதாரர் குறிப்பிடுவது போல் எந்த கட்டிடமும் கட்டபடுவதாக எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கினை முடித்து வைத்தனர்