சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணி விரைவில் நிறைவடைய உள்ளது. தற்போது புதிய குழிகள் தோண்டும் பணி நிறுத்தப்பட்டு ஏற்கனவே தோண்டிய குழிகளில் மட்டுமே அகழாய்வு செய்யப்படுகிறது. அதே சமயம் ஆவணப்படுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளது. 



கொந்தகையில் முதுமக்கள் தாழி மற்றும் எலும்புகள் கிடைத்துவரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் முதுமக்கள் தாழிகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் சிவகங்கை இளையான்குடி அடுத்த முனைவென்றியில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், கீறல் குறியீடுகள், கல் ஆயுதம், செங்கல், வட்டுச்சில், சிறிய மட்கலங்கள், தாங்கிகள், கருப்பு நிற கற்கள், எலும்புகள், பற்கள் போன்றவை  கள ஆய்வில் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

இப்பகுதியைக் தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர் ந.இராஜேந்திரன் மேற்பரப்பு களஆய்வு செய்து கூறுகையில், முனைவென்றி கொடுமணலுக்கு இணையான ஊர். இங்கு வயல் பகுதி, கொழஞ்சித் திடல், ஆவடியாத்தாள் கண்மாய் ஆகிய மூன்று பகுதியையும் சேர்த்துக் கிட்டத்தட்ட 100 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்காலத்தைச் சார்ந்த தொல் சான்றுகள் கிடைக்கின்றன.

மேலும் கீழடி தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணிகள் டிசம்பருக்குள் முடிவடையும் மாவட்ட ஆட்சியர் தகவல் !



முனைவென்றியில் கிடைத்திருக்கும் இச்சான்றுகளை ஆய்வு செய்தால் கீழடி ஆய்வு முடிவுகளைப் போலக் கிட்டத்தட்ட 3,200 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் ஆதிச்சநல்லூர், அலகன்குளம், கொடுமணல், பொருந்தல், கீழடி, சிவகளை அகழ்வாய்வுகளில் கிடைத்த சான்றுகள் முனைவென்றியில் மேற்பரப்பு களஆய்வில் கிடைக்கின்றன. அப்படி என்றால் முனைவென்றியில் முறைப்படி அகழ்வாய்வு செய்தால் இன்னும் எப்படிப்பட்ட தொல் சான்றுகள் கிடைக்கக்கூடும். இத்தகு வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கக்கூடிய முனைவென்றியைத் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்குப் பரிந்துரை செய்து அகழ்வாய்வு செய்திட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். ஊர் மக்களின் ஆசையும் அதுவே இருக்கிறது என்றார்.