மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்புவனம் அடுத்த கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணி இந்திய தொல்லியல் துறை சார்பாக நடைபெற்றது. நான்கு, ஐந்து, ஆறு, ஏழாம் கட்ட அகழாய்வுகள் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஆறாம் கட்ட அகழாய்வில் கீழடி மட்டுமல்லாமல் கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அகழாய்வு பணி நடைபெற்றது.
கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி துவங்கிய 7 ஆம் கட்ட அகழாய்வில் நான்கு ஊர்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி 6ஆம் கட்ட அகழாய்வில் மக்கள் வாழ்விடப் பகுதியாக கருதப்படும் அகரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஐந்து அடுக்களுக்கு மேல் கொண்ட உறை கிணறு கிடைக்கப்பெற்றது.
சுடுமண் முத்திரை, முன்னோர்கள் நெசவுக்கு பயன்படுத்திய தக்களி என்னும் நூல் கோர்க்கும் கருவி, பெண்கள் காதில் அணியும் அழகிய வேலைப்பாடுகள் உடைய சுடுமண் காதணிகள், கூர்மையான பென்சில்போல் வடிவம் கொண்ட எலும்பு புள்ளி, சுடுமண் விளையாட்டு பொம்மை, பாசிகள், சுடுமண் ஆட்டக்காய்கள், சங்கு வளையல்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ஆறு அடுக்கு கொண்ட ஒரு உறை கிணறு கிடைத்துள்ளன.
இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. இவற்றின் பயன்பாடுகள், காலம் குறித்து ஆராய்ச்சிக்கு பின்னரே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். மேலும் கீழடி, அகரம், மணலூர், மற்றும் கொந்தகையில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில் மணலூரில் பொருட்கள் கிடைக்கவில்லை என நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.