மதுரை ,போடி இடையே 90 கிலோமீட்டர் தூரம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர்கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இதை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ரயில் சேவை தொடங்கிய வேகத்தில் பணிகள் முடங்கின. போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்தக்கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த நிலையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்தும் பாராளுமன்றத்தில் இந்த ரயில் பாதை திட்டம் தொடர்பாக தொடர்ந்து பேசி வந்தார். இதையடுத்து போதிய நிதி ஒதுக்கீடு செய்து அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கின.
மதுரையில் இருந்து தேனி வரை 75 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் மதுரை, தேனி இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து தொடங்கியது. கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சென்னையில் நடந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி இந்த ரயில் பாதையில் பயணிகள் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தேனியில் இருந்து போடி வரையிலான பணிகளும் நிறைவு பெற்றன.
அந்த பாதையில் பல்வேறு கட்ட ரயில் சேவைக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டன. பல முறை ரயில் மற்றும் ரயில் என்ஜின் சோதனை ஓட்டங்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதையடுத்து மதுரையில் இருந்து தேனி வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் சேவையை போடி வரை நீட்டிக்க ரயில்வே துறை அனுமதி அளித்தது. போடி வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள் தொடக்க விழா போடி ரயில் நிலையத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டு போடி, மதுரை பயணிகள் ரயில், போடி, சென்னை சென்ட்ரல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 2 ரயில் சேவையையும் தொடங்கி வைத்தார். இரவு 8.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலையும், இதைத்தொடர்ந்து மதுரைக்கு செல்லும் ரயிலையும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அந்த ரயில்களில் பயணிகள் உற்சாகத்துடன் பயணம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்