பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸை குற்றவாளி என அறிவித்த விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு விவரம்:
பெண் எஸ் பி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ் பெண் எஸ் பி காரின் சாவியை பிடுங்கிய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணன் ஆகியோர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி புஷ்பராணி, குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு (354 A, 341 506 4(F) women harassment ) ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்ட நிலையில் 3 ஆண்டுகள் சிறை ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பெண் எஸ் பியை தடுத்து நிறுத்திய செங்கல்பட்டு முன்னாள் எஸ் பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நடந்தது என்ன?
தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி ராஜேஸ் தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் எஸ் பி தன்னிடம் அத்துமீறிய சிறப்பு டி.ஜி.பி. மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து சட்டப்பூர்வநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.பி.எஸ். அதிகாரி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.
வழக்கின் பின்னணி:
அதனடிப்படையில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னள் எஸ்பி கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
2 ஆண்டுகளாக விசாரணை:
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 138 முறை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளான 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி, விழுப்புரம் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னள் எஸ்பி கண்ணன் ஆகிய இருவரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.