உசிலம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் உடலில் கத்தியால் கீறிக் கொண்டு ரத்தபழி கொடுத்து பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தென் மாவட்டங்களில் சிறுதெய்வங்கள் வழிபாடு மிக முக்கியாமான ஒன்று. தங்களது குல தெய்வ வழிபாடை பயபக்தியாக கடைபிடிப்பார்கள். இதில் சில முக்கிய விழாக்களில் நூதன முறையில் தங்களது பாரம்பரிய பழக்கங்களை தொடர்ந்து கடைபிடிப்பது முக்கியமான ஒன்று. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த  இ.கோட்டைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ராமலிங்க சௌண்டம்மான் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.






 

இந்த ஆண்டும் வைகாசி திருவிழா நேற்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது., இரண்டாம் நாள் திருவிழாவான இன்று உத்தப்புரம் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலிலிருந்து சௌண்டம்மன் கோயிலுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.



இந்த கரகம் ஊர்வலமாக எடுத்து வரும் போது வழி நெடுகிலும் துர்தேவதைகள் தடுத்து நிறுத்தும் எனவும் துர்தேவதைகளுக்கு ரத்தபழி கொடுத்து கரகத்தை எடுத்து வருவதற்காக சுமார் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கத்தியால் உடலை கீரிக் கொண்டு ரத்தபழி கொடுப்பதால் துர்தேவதைகள் விலகிக் கொண்டு கரகத்தை எந்த இடையூறும் இன்றி கோயிலுக்கு எடுத்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

 



 

மேலும் கத்தியால் உடலை கீறிக் கொண்டு விநோத நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கரகத்துடன் உடன் வந்து சாமி தரிசனம் செய்தனர்.

 



 

இது குறித்து பக்தர்கள் சிலர் கூறுகையில்..,” மதுரை மாவட்டங்களில் பல்வேறு விநோத திருவிழாக்கள் நடைபெறும். அதில் எங்கள் பகுதி திருவிழாவும் ஒன்று. துடியான தெய்வமாக இருப்பதால் பொதுமக்கள் பயபக்தியோடு இருந்து திருவிழாவை கொண்டு செலுத்துகிறோம். நோய், நொடியில்லாமல் அனைவரும் நல்லபடியாக இருக்க வேண்டும் என இந்த திருவிழாவை சிறப்பாக கொண்டாடுகிறோம்” என்றனர்