நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. திண்டுக்கலில் கோடீஸ்வரர் ஒருவரின் மகன் தேர்தலில் போட்டியிட வெட்புமனுத்தாக்கல் செய்திருப்பது திண்டுக்கல் அரசியலில் சூட்டை கிளப்பியுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் அவரது தந்தை சேகர் ரெட்டியின் மிக நெருக்கமான நண்பர் என்பது தான். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சேகர் ரெட்டி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சார்பாக வழக்குகள் பதிவு செய்தன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அவரது வீட்டில் கட்டுக் கட்டாக புதிய 2000 நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது திண்டுக்கல் ரத்தினத்தின் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. ஆனால் அதன்பிறகு பிறகு அவ்வழக்கில் இருந்து இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.




இந்த சூழலில் தான் நகர்மன்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக  சேகர் ரெட்டியின் நெருங்கிய நண்பரான லயன்.ரத்தினத்தினத்தின் 22 வயதான இளைய மகன் கே.கே.ஆர் வெங்கடேஷ் வார்டு உறுப்பினராக போட்டியிட சுயேட்சையாக மனுத்தாக்கல் செய்துள்ளார். திண்டுக்கலில் இவரது தந்தை மிகுந்த செல்வாக்கு வாய்ந்தவர். ஆள் பலமும் பண பலமும் படைத்தவர். வீட்டின் முன்பு எப்போதும் பி.எம்.டபிள்யூ ,ஜாகுவார் என சொகுசு கார்கள் நிறைந்து கிடக்கும். புதுக்கோட்டை பகுதியிலும் இவரது பெயர் பிரபலம். இவரது சொந்த ஊர் அறந்தாங்கி அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமம். 




ஆரம்பத்தில் சர்வேயராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் அதிலிருந்து வெளியேறி ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். தொடர்ந்து மணல் குவாரி தொழிலில் கால் பதித்தார். இவரது வாழ்க்கையில் மிக முக்கிய ஏற்றத்திற்கு காரணமானவர் சேகர் ரெட்டியுடன் இணைந்த பிறகு ரத்தினத்திற்கு தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பெருக்கிக்கொண்டே போனார். திண்டுக்கலிலேயே நடந்த மிக பிரம்மாண்ட திருமணம் என சொல்லும் அளவிற்கு ரத்தினத்தின் மூத்த மகனின் திருமணம் நடைபெற்றது. பத்தாயிரம் வாழை மரங்கள், 1 லட்சம் பேருக்கு விருந்து, பாட்டு கச்சேரி என தனது செல்வாக்கை நிருப்பித்தார் திண்டுக்கல் ரத்தினம். 




திண்டுக்கல் ரத்தினத்தின் இளைய மகனான 22 வயதான  வெங்கடேஷ் உள்ளாட்சி தேர்தலில் களமிறங்கி.. திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 17வது வார்டில் தனித்துப் போட்டியிடப்போவதாக தனது அண்ணன் துரையுடன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். ஆனால் பெரும்பாலும் தனது தந்தையின் தொழிலை தான் கவனித்து வருகிறார். 


திண்டுக்கல் ரத்தினத்தின் மகன் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது பலருக்கும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அதை விட ஏன் திடீரென தேர்தலில் களமிறங்குகிறார்கள் என காராணம் புரியாமல் பலரும் குழம்பிப் போய் இருக்குறார்கள். ஏனெனில் இவர் மனுத்தாக்கல் செய்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு எம்பி பதவிக்கே போட்டியுட முடியும் என்கிற சூழலில் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவது திண்டுக்கல் மாநகராட்சி வட்டாரத்தில்  பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 




திண்டுக்கல் ரத்தினத்துக்கு அதிமுக, திமுக என 2 பக்கமும் ஆதரவு உண்டு என கூறப்படுகிறது. அக்கட்சிகளிலிருந்து கூட வெங்கடேசை களமிறக்க தயாராக இருந்த போதும் வேண்டாம் என ஒதுக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான் 17வது வார்டு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுக, அதிமுகவின் ஓட்டுகள் பிரிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விறுவிறுப்புடன் தயாராகிறது திண்டுக்கல்!



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்