டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்த ரத்திற்கும் தமிழக அரசிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. தி.மு.க., வழக்கம்போல் சொல்லும் பொய்களில் இதுவும் ஒன்று என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியளித்தார்.

 

எம்.ஜி.ஆரின் 108-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

 

சிவகங்கை அரண்மனைவாசல் முன்புள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆரின் 108-ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

 

செய்தியாளர் சந்திப்பில் திண்டுக்கல் சீனிவாசன்

 

நிகழ்ச்சி முடிவுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கேள்விக்கு பதிலளிக்கையில்...,” டங்க்ஸ்டன் சுரங்க விவகாரம் நீண்ட நாட்களாக உள்ள பிரச்னை. திமுக ஆட்சிக்குவந்து 4 ஆண்டுகளை கடந்த நிலையில் அதுகுறித்து எதுவும் கண்டுகொள்ளாமல் விட்டதுடன், துரை முருகனை வைத்து ஒரு கடிதத்தை மட்டுமே தலைமை செயலாளருக்கு எழுத செய்தனர். 

 

ஹெச்.ராஜா சொல்லியது உண்மைதான்

 

தி.மு.க வழக்கம்போல் சொல்லும் பொய்களை போல் இதுவும் ஒன்று எனவும் தமிழக அரசிற்கும் மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பரந்தூர் விமான நிலையத்தில் மக்களுக்கு புரிதல் இல்லை என ஹெச்.ராஜா சொல்லியது உண்மைதான். எங்கள் ஆட்சியின்போதும் ஒரு சில திட்டங்களுக்கு மக்கள் புரிதல் இல்லாததாலேயே எதிர்க்கப்பட்டது. இதற்கு பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில் விரைவில் தீர்வு எட்டப்படும். த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் சென்றது குறித்த கேள்விக்கு அவர் குறித்து பேச வேண்டியது எதுவும் இல்லை. அவர் கட்சி, அவர் செயல்படுகிறார்.

 

ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 3 லட்சம் கடன்

 

தி.மு.க., தான் தமிழக அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு ”கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியின்போதும் தற்பொழுதுள்ள ஆட்சியின்போதும் உள்ள கடனை ஒப்பிட்டு பாருங்கள்., தமிழக மக்கள் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 3 லட்சம் கடன் சுமை உள்ளது. அதுதான் இந்த ஆட்சியின் லட்சணம். ஆள தெரியாத தன்மை அதனை பூசி மொழுகுகிறார்கள்.

 

அளுநர் தனக்குரிய கடமையை செய்யவில்லை என, சபாநாயகர் அப்பாவு கூறியது குறித்த கேள்விக்கு சபாநாயகர் அப்பாவுவும், முதல்வர் ஸ்டாலினும் ஆளுநரை மனிதராகவே மதிப்பது இல்லை. அ.தி.மு.கவை பொருத்தவரை ஆளுநரை சட்டத்தின்படி மதிக்கிறோம். அவரின் செயல்பாடுகள் சட்டத்திற்குட்பட்டு இருந்தால் ஆதரிக்கிறோம். ஆளுநர் அழைத்துள்ள தேநீர் விருந்தில் கலந்துகொள்வது குறித்த கேள்விக்கு எங்களுக்கு அது குறித்து தெரியாது” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.