அறுபடை வீடுகளில்  மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என  பக்தர்கள் பல்வேறு தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு  தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .




இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில். இந்த கோயிலுக்கென பல்வேறு சிறப்புகள் உண்டு என்பதால் இங்கு வந்து வழிபட்டு செல்வோர்கள் தாங்கள் வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு அதிகம் வருவர். அப்படி நேர்த்திக்கடன் செலுத்த வருவோர்கள் கிரிவலப்பாதையில் உருண்டு கொடுத்தல், மொட்டை அடித்தல், காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்து வருகின்றனர்.




கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில்  வருட தைப்பூசத்திருவிழா முடிவடைந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.  அதன்படி  இன்றும் பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குறவர் இன மக்கள் மற்றும் வனவேங்கைகள் கட்சியினர் சீர்வரிசை பொருட்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு  இன்று  வந்து சாமி தரிசனம் செய்தனர். 


முன்னதாக பஸ்நிலைய பகுதியில் இருந்து மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்கள், கிழங்கு வகைகள், தேன், தினைமாவு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை மூங்கில்நார் கூடைகளில் பெண்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் முன்பு மேளம், பறை இசை முழங்க சிறுவர்-சிறுமிகள் வேடன்-குறத்தி போன்று வேடமிட்டு ஆடி வந்தனர்.




பின்னர் பாதவிநாயகர் கோவில் முன்பு சீர்வரிசை பொருட்களுடன் குறவர் கூத்து, வேலன் ஆட்டம், காவடி ஆட்டம் உள்பட பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். இது, அங்கு வந்த பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.  இதைத்தொடர்ந்து முருகன் கோவிலுக்கு சென்று சீர்வரிசை பொருட்களை படைத்து வழிபட்டனர். இதுகுறித்து வனவேங்கை கட்சி மாநில தலைவர் இரணியன் கூறுகையில், குறவர் மகள் வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்ததால் தாய் வீட்டு சீதனமாக மலைப்பகுதியில் விளையும் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து தரிசனம் செய்தோம். ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் வழிபட உள்ளோம். பூர்வீக தமிழ்குடி மக்களாகிய எங்களுக்கு அறுபடை வீடுகளில் உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.


தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:-  Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்