சாத்தூர் ராஜம்மாள் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வழங்கிய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பாராட்டு
விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையை சேர்ந்த சிவ பாலசுப்ரமணியின், கிருஷ்ணவேணி, உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில்," எங்களின் உறவினர்களாகிய ஆறு பேரும் கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சிப்பிபாறையிலுள்ள ராஜம்மாள் பயர் ஒர்க்சில் நடந்த வெடி விபத்தில் சிக்கினர். இதில் படுகாயமுற்றவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில், அரசு நிவாரணமாக 10 லட்ச ரூபாய் மற்றும் அரசு வேலை அறிவித்தது. மேலும் தற்காலிக நிவாரணமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அரசு அறிவித்தது, ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை. தற்பொழுது வருவாய் இன்றி எங்களது குடும்பங்கள் தவித்து வருகின்ற. எனவே எங்கள் பொருளாதாரத்தை காத்திட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மற்றும் தலா 10 லட்ச ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், சாத்தூர் தீ விபத்தில் இறந்தவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.அதையடுத்து நீதிபதி," சாத்தூர் ராஜம்மாள் பயர்ஒர்க்ஸில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்ச ரூபாய் வீதம் 42 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க துணை நின்ற அரசு வழக்கறிஞருக்கும், இழப்பீடு வழங்கிய தமிழக அரசுக்கும் நீதிமன்றம் பாராட்டுக்களை தெரிவிக்கிறது. இந்த இழப்பீடு அவர்களின் துயரை சிறிதளவாவது துடைக்கும்.இவ்வழக்கில் யாராவது தனிநபர்கள் நிவாரணம் பெற விரும்பினால் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.