அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிக நன்மை இருப்பதோடு, சில தீமைகளும் ஏற்படுகின்றன. நவீன காலத்துக்கு ஏற்ப திருடர்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடுகின்றனர். வீட்டில் பணம் இருந்தால் திருடு போகும் என்று வங்கியில் செலுத்துகிறோம். ஆனால் நவீன திருடர்கள் நமது வங்கி கணக்கில் புகுந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர். இதற்கு ஒவ்வொரு ஆசாமியும் ஒவ்வொரு யுக்தியை கையாளுகின்றனர்.
இதில் குறிப்பாக வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று குறுந்தகவலுடன் இணையதள இணைப்பை (லிங்க்) செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புவார்கள். அதை கிளிக் செய்து ஆதார், செல்போன், வங்கி கணக்கு எண் போன்ற விவரங்களை கொடுத்ததும், செல்போனுக்கு ஓ.டி.பி. எண் வருகிறது. அதை நாம் மோசடி நபர்களிடம் கூறியதும் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சுருட்டி விடுகின்றனர்.
அதேபோல் கடன் வழங்கும் செல்போன் செயலிகள், பரிசு தொகை விழுந்ததாக குறுந்தகவல், ஆன்லைன் மார்க்கெட்டிங் என பலவகையில் மோசடி நடக்கிறது. இதன்மூலம் பொது மக்களுக்கு தெரியாமலேயே அவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். அதுபற்றி செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்த பின்னரே வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது தெரியவருகிறது. அதன்பின்னரே பாதிக்கப்பட்ட மக்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் மாதந்தோறும் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிகின்றன. அதுபற்றி விசாரித்து பலரின் பணத்தை போலீசார் மீட்டு திரும்ப ஒப்படைத்து உள்ளனர். அதே நேரம் பெரும்பாலான மோசடி நபர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதனால் மோசடி நபர்கள் எளிதில் சிக்குவது இல்லை. ஆனால் மோசடி குறித்து உடனடியாக புகார் அளித்தால் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு விடலாம்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலிசார் கூறுகையில், நமது செல்போனுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களில் வரும் தேவையற்ற இணையதள இணைப்புகளில் செல்ல கூடாது. அதன்மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்கள் பணத்தை எடுத்துவிட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும். அதன்மூலம் மோசடி நபரின் வங்கி கணக்கை முடக்கி பணத்தை மீட்டு விடலாம் என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்