பழனி - கொடைக்கானல் சாலையில் சுற்றுலா சென்ற வாகனம் 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்தவர் அஜேஸ் (42). இவர் தனது உறவினர்களுடன் நேற்று கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளார். அப்போது அவர்கள் கொடைக்கானல் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டு ரசித்த பின்னர் அங்கிருந்து பழனி வழியாக கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி, அவர்களது சுற்றுலா வேனை கொடைக்கானலில் இருந்து பழனி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அந்த வேனை எர்ணாகுளத்தை சேர்ந்த சால்தீன் (33) என்பவர் ஓட்டி வந்துள்ளார். கொடைக்கானல் - பழனி மலைப்பாதையில் மேல்பள்ளம் என்ற பகுதியில் அந்த வேன் வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் வேனில் வந்தவர்கள் அபயகுரல் எழுப்பினர். ஒருகட்டத்தில் அந்த வேன் சாலையோரத்தில் இருந்த 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Video Amit Shah : மசூதியில் எழுப்பப்பட்ட அசான் ஒலி.. பேச்சை நிறுத்திய அமித்ஷா.. வைரலாகும் வீடியோ..
இந்த விபத்தில் வேனில் வந்த அஜேஸ், டிரைவர் சால்தீன், பிரவீன் (38), அவரது மனைவி ரம்யா (34), சுமித் (33), சைவி (38), ஆதிஸ் (12), நிரஞ்சன் (12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை கண்டதும் அந்த வழியே சென்றவர்கள் உடனடியாக கொடைக்கானல் தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள் பள்ளத்தில் இறங்கி, வேனின் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஜேஸ் பரிதாபமாக உயிரிழந்தார். டிரைவர் சால்தீன் உள்பட 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 200 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்