இந்தியா முழுவதும் நேற்று தசரா விழா கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக மேற்கு வங்கத்தில் தசரா விழா எப்போதும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நேற்று கடைசி நாள் பூஜைக்கு பிறகு, தேவி துர்க்கை சிலையை கடலில் கரைக்கும் துர்கா விசர்ஜன் என்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்காக மேற்கு வங்க மாவட்டத்தின் ஜல்பைகுரி பகுதியில் அமைந்துள்ள மால்பசார் ஆற்றில் சிலையை கரைக்க 100-க்கும் மேற்பட்டவர்கள் கூடி பேரணியாகச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஆற்றில் வேகமாக வந்த வெள்ளத்தில் பல்வேறு நபர்கள் அதில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில தீயணைப்புத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்னும் தகவல் தெரியவந்துள்ளது. மேலும் 100 நபர்களுக்கு மேல் காணாமல் போனதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் 8 உடல்களை மீட்புப்படையினர் தற்போது வரை மீட்டுள்ளனர்.
100-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்னும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த கோர விபத்து தொடர்பாக பிரதமர் மோடி தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கில், “துர்கா பூஜா நிகழ்ச்சி கொண்டாடத்தில் ஜல்பைகுரி பகுதியில் ஏற்பட்டுள்ள விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பூடான் நாட்டு பகுதியில் இருந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு காரணமாக இந்திய பகுதியில் இருந்த ஆற்றிலும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளது. அதைத் தொடர்ந்து இந்த பகுதியில் எதிர்பாரா திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.