மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டின்போது, ​​அருகில் உள்ள மசூதியில் தொழுகைக்கு ஆசான் அழைப்பு விடுக்கப்பட்டதால், சிறிது நேரம் அது முடியும் வரை காத்திருந்து பின் தனது உரையை துவங்கினார். அந்த வீடியோ வைரலாகிறது.






பாங்கு ஒலிக்காக காத்திருந்த அமித் ஷா


வடக்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள ஷோகத் அலி ஸ்டேடியத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அரை மணி நேரம் உரை ஆற்றினார். இடையில் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, சிறிது நேரம் நின்று மேடையில் இருந்தவர்களிடம் "மசூதியில் ஏதாவது நடக்கிறதா" என்று கேட்டார். மேடையில் இருந்த ஒருவர் அவரிடம் ‘ஆஸான்’ நடக்கிறது, பாங்கு சொல்கிறார்கள், என்று கூறியதும், அமித் ஷா தனது பேச்சை நிறுத்தினார். பேச்சை நிறுத்திய அவருக்கு கூட்டத்தில் இருந்து ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டு, பெரும் கரவொலி எழுப்பப்பட்டது. சிறிது நேரம் கழித்து, தொழுகைக்கான அழைப்பு இப்போது நின்றுவிட்டதாகக் கூறிய அவர், தனது உரையைத் தொடரலாமா என்று கேட்டார். “நான் ஆரம்பிக்கலாமா வேண்டாமா? சத்தமாகச் சொல்லுங்கள், நான் தொடங்கவா, ”என்று கேட்டுவிட்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.



காத்திருந்த மக்கள்


அதிகாலையில் இருந்து மணிக்கணக்கில் காத்திருந்த மக்களிடம் அமித் ஷா மக்களிடையே பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​மற்றும் பிரதமர் அலுவலகத்தின் (பிஎம்ஓ) இணை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.


தொடர்புடைய செய்திகள்: அக்டோபர் மாதம் எந்த ராசிக்கு ராஜயோகம்? எந்த ராசிக்கு கவனம் தேவை? முழு ராசிபலன்கள்...!


மூன்று குடும்பங்கள்


இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, "1947 இல் இருந்து ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்தது அப்துல்லா குடும்பம், முஃப்தி குடும்பம், காந்தி - நேரு குடும்பம் எனும் 3 குடும்பங்கள்தான். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி அடையாமல் இதுவரை இருந்ததற்கு இந்த 3 குடும்பங்கள்தான் காரணம். தவறான ஆட்சி நிர்வாகம், ஊழல், வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்காதது என்பதுதான் இவர்கள் செய்த ஆட்சியின் அடையாளமாக இருந்தது. இவர்கள் ஜம்மு காஷ்மீர் மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை", என்று கடுமையாக சாடினார்.



பாகிஸ்தான் பற்றி பேசுபவர்கள்


மேலும் பேசிய அவர், "காஷ்மீரில் உள்ள அரசியல்வாதிகள் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி வருகிறார்கள். பாகிஸ்தானுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். காஷ்மீர் மக்களிடம்தான் பேசுவோம். தீவிரவாதத்தை மோடி அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் முழுமையாக துடைத்தெறியப்பட வேண்டும் என எங்கள் அரசு விரும்புகிறது. இந்தியாவின் அமைதியான இடமாக ஜம்மு காஷ்மீரை மாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம். பாகிஸ்தான் குறித்து அடிக்கடி பேசும் அரசியல்வாதிகளிடம் கேட்கிறோம், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எத்தனை கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்திருக்கிறது? ஆனால், காஷ்மீரின் அனைத்து கிராமங்களுக்கும் கடந்த 3 ஆண்டுகளில் நாங்கள் மின்சாரம் கொடுத்துள்ளோம்", என்று அமித் ஷா பேசினார்.