நிலக்கோட்டை அருகே அம்மையநாயக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவில், இருதரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. உடனே, காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகேவுள்ள அம்மையநாயக்கனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா இரண்டாண்டுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி கடந்த பத்து நாட்களாக பல்வேறு சமூக மண்டகப்படியில் பல அவதாரங்களில் எழுந்தருளி நகர்வலம் வந்த முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்று வந்தது.
திருவிழாவில் கடைசி நாளான நேற்று கிடா வெட்டுதல், அக்னிசட்டி எடுத்தல் அம்மன் நகர்வலம் வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிக்கு பின் இரவு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் முத்தாலம்மன் கோவில் முன் வைக்கப்பட்டிருக்கும் வழுக்கு மரத்தில் ஏறும் நிகழ்வுக்கு பின்பே அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதனை அடுத்து தாரை தப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க மஞ்சள் நீராடி முளைப்பாரி ஊர்வலத்துடன் கடைவீதி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு வந்த முத்து மாரியம்மன் முன் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது கடந்த 10-நாள் திருவிழாவின் போது குறிப்பிட்ட இரு பிரிவினருக்கிடையே இருந்து வந்த பகை முற்றி வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில் இரு பிரிவாக பிரிந்தே கலந்து கொண்டனர். அப்போது இருதரப்புக்குமிடையே மோதல் ஏற்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ளும் வகையில் கும்பலாக மாறி மாறி சராமாரியாக கடுமையாக தாக்கி கொண்டனர். இதனால் திடீரென அப்பகுதி முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்தது. கட்டுக்கடங்காத தாக்குதல் அதிகரிக்கவே சுதாரித்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி காவல்துறையினர் உதவியுடன் அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்து திருவிழாவை நிறைவு செய்தனர்.
மேலும், கடந்த ஒரு வாரமாக புகைந்து கொண்டிருந்த பகை முற்றி இறுதி நாள் திருவிழாவில் போர்க்களம் போல இரு கும்பல் ஒருவர் ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.