வந்தே பாரத் ரயில் சேவை


இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள்  இயக்கப்பட்டு வருகிறது.   இந்த வந்தே பாரத் ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை - கோவை, சென்னை -  நெல்லை, சென்னை இருந்து பெங்களூர் வழியாக மைசூர் என பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.


சென்னை  - நாகர்கோவில் வந்தே பாரத்



கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க பயணிகள் வசதிக்காக  சென்னை - நாகர்கோவில் இடையே வாரம் மும்முறை சேவை வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி சென்னை  - நாகர்கோவில் வந்தே பாரத் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06057) சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 28 வரை  வெள்ளி, சனி, ஞாயிற்று கிழமைகளில் காலை 05.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை வந்தே பாரத் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் (06058) குறிப்பிடப்பட்ட அதே வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 02.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த  சிறப்பு ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 05.55  மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத்  ரயில் களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு விரைவில் துவங்கும்.