பழனியில் கிரிவல பாதையில் வசித்து வந்த பொதுமக்களுக்கு இரண்டு சென்டு இடம் வழங்குவதாக கூறி , ஒரு சென்டுக்கும் குறைவாக காலி வீட்டுமனை பட்டா அதிகாரிகள் வழங்கியதாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் கிரிவலம் பாதையில் உள்ள அண்ணா செட்டி மடம் பகுதியில் ஐந்து தலைமுறைகளாக வசித்து வந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்து மாற்று இடம் வழங்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் அடிவாரம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதிபதி அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து குடியிருப்புகளாக வசித்து வருவதற்கு மாற்று இடம் வழங்குவதற்கு நீதிமன்றத்தில் பரிந்துரை செய்தார். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடங்கள் வழங்குவதற்கான அடிப்படையில் நீதிமன்றம் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்றிடம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் 150-க்கும் பொதுமக்களை இன்று வட்டாட்சியர் சக்திவேலன் ஏற்பாட்டில் இரண்டு சென்ட் அளவிலான காலி வீட்டுமனை பட்டா வழங்குவதாக கூறி பொதுமக்களை அழைத்து வந்துள்ளனர் .
தனியார் மண்டபத்தில் வைத்து வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அப்போது அந்த வீட்டுமனை பட்டாவில் ஒரு சென்டிற்கும் குறைவாக இடம் பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் வீடு கட்டுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை அந்த பட்டாவில் குறிப்பிட்டிருந்தது. அதில் வீடு கட்டுவதற்கு மூன்று அடி பின்புறமும், 3 அடி வீட்டின் முன்புறமும் காலியாக வைத்திருக்க வேண்டும், மாடி வீடு கட்டக்கூடாது என்ற நிபந்தனைகள் எல்லாம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள், அதிகாரியிடம் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அதிகாரிகளும்,
நகர மன்ற தலைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இதனை கண்டித்து இரண்டு சென்டு நிலம் வழங்கப்படும் என அழைத்து வந்து தங்களை அதிகாரிகள் ஏமாற்றி விட்டதாக என கூறி பொதுமக்கள் பழனி தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்களை வட்டாட்சியரிடம் அழைத்துச் சென்று தீர்வு காணப்படும் என கூறி அழைத்துச் சென்றனர். பழனியில் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பாளர்களுக்கு மாற்று இடம் தருவதாக கூறி அதிகாரிகள் ஏமாற்றியதாக பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.