திண்டுக்கல் மாவட்டத்தில்  மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குகிறது கொடைக்கானல். இந்த பகுதில் அடந்த வனப்பகுதிகள் அழகிய மலைமேடுகள் என பார்ப்பவகளை சுண்டி இழுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரபலமான சுற்றுலா தலத்தில்   மதிக்கெட்டான் சோலை எனும் அடர்ந்த வனப்பகுதி கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வனத்திற்கு உள்ளே செல்லாமல் சாலையிலிருந்து இந்தக் காட்டை பார்த்து இரசிக்க முடியும்! வனத் துறையினரின் அனுமதி பெறாமல் இங்கு செல்ல முடியாது. தற்போது இங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




மர்மம் நிறைந்த மதிகெட்டான்சோலை:


இதற்கு காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் இந்தக் காட்டின் உள்ளே செல்பவர்கள் தங்கள் மதி மயங்கி காட்டை விட்டு வெளியே வராமல் அங்கேயே உயிரை விட்டுவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. மீறி உயிருடன் திரும்புபவர்கள் தங்கள் அறிவிழந்து ஒருவித பைத்தியக்கார மனநிலையில் தான் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. இதற்கு நான்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.


இந்தக் காட்டினுள் பலவித மூலிகைகள் இருப்பதாகவும் அவை இந்தக் காட்டிற்குள் நுழையும் மனிதர்களின் மதியை மயக்கி அவர்களின் மரணத்திற்கு காரணமாகிறது என்று சொல்லப்படுகிறது. சித்தர் போகர் உருவாக்கிய சிலை ஒன்று இந்தக் காட்டினுள் இருப்பதாகவும் அந்த சிலையைப் பாதுகாக்க சித்தர்களின் சித்து விளையாட்டுதான் காட்டினுள் அத்துமீறி நுழைபவர்களை இவ்வாறு பைத்தியக்கார மனநிலைக்கு கொண்டு செல்கிறது என்றும் சமயத்தில் மரணத்தை சம்பவிக்கிறது என்றும் கூறப்படுகிறது.




வீட்டில் பூஜை அல்லது விஷேசங்கள் நடக்கும் பொழுது குழந்தைகள் இனிப்புகளை முதல் ஆளாக எடுத்து தின்றுவிடாமல் இருப்பதற்காக "சாமி கண்ணைக் குத்திவிடும்!" என்று நாம் சொல்லி பயமுறுத்துவது போல் 'மதிகெட்டான் சோலை', என பெயர் வைத்து அதன் மூலம் மக்கள் இதற்குள் செல்லாமல் தடுத்து இயற்கையை பாதுகாக்க சிலர் மேற்கொண்ட ஒரு உத்திதான் இது; அது காலம்காலமாக தொடர்கிறது எனவும் கருத்து நிலவுகிறது.


மிகுந்த அடர் வனமாக இருப்பதால் சூரிய ஒளி இக்காட்டில் புகாது. ஆகவே பகலிலும் கூட இருளாகவே இருக்கும். சில அங்குலம் உயரதிற்கு தரையிலிருந்து மேலே கொட்டி கிடைக்கும் இலை மற்றும் தழைகளின் மேல் நடக்கும் மனிதர்கள் சிறிது தண்ணீர் தேங்கி அதனால் ஏற்படும் சதம்பல்களில் சிக்கிக் கொள்கின்றனர். இது அமானுஷ்யமான கலக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி திகிலடைய வைக்கிறது.




காட்டு விலங்குகளின் அச்சுறுதலும் இருக்கிறது.  வண்டுகள், பூச்சியினங்கள் மற்றும் பறவைகளின் புதுவித சத்தங்கள் நிச்சயம் எவரையும் திகைப்படைய வைக்கும். இவைகள் எல்லாம் சேர்த்து கொடுக்கும் பயம் காரணமாக இந்த காட்டிற்குள் நுழைபவர்கள் தங்கள் சமநிலையை இழந்து வந்த வழி மறந்து இருளில் பாதை மாறி பெரும் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் காட்டிலேயே சுற்றி சுற்றி இறுதியில் தங்கள் உயிரை விட்டுவிடுவர் அல்லது மீட்கப்பட்டாலும் தாங்கள் சந்தித்த இந்த பயங்கர அனுபவத்தின் காரணமாக ஒருவித பிரம்மைப் பிடித்த மனநிலைக்கு சென்று விடுவர் என்றும் சொல்லப்படுகிறது! இதில் நான்காவது காரணம்தான் உண்மையாக இருக்கும் என்று நமது அறிவு நமக்கு உணர்த்துகிறது! எது எப்படி இருந்தாலும் இயற்கையின் இந்த பிரம்மாண்டம் நிச்சயம் அதிசயம்தான்! ஆபத்தும்தான்!