கர்நாடக அரசில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், நேற்று இரவு நடந்துள்ளது. கொலை செய்யப்பட்ட பெண்ணான பிரதீமாவுக்கு 45 வயதாகிறது.
கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்துள்ளார். 


சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் அவர் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பு தகவல் தெரிவிக்கிறது. வேலை முடிந்தவுடன் பிரதீமாவை அவரது வீட்டில் விட்டுவிட்டு ஓட்டுநர் சென்றுள்ளார். இரவு 8.30 மணியளவில் கணவனும் மகனும் இல்லாத நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


கர்நாடகாவை உலுக்கிய பெண் அதிகாரி கொலை:


இன்று அதிகாலை பிரதீமாவின் சகோதரர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, ​​அவர் இறந்து கிடந்துள்ளார். நேற்று இரவே பிரதீமாவை அவரது சகோதரர் தொலைப்பேசியில் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவர், உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டார்.


பெங்களூரு நகர தெற்கு மண்டல டி.சி.பி. ராகுல் குமார், இதுகுறித்து பேசுகையில், "வழக்கம்போல் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பிரதீமா வீடு திரும்பினார். நேற்று இரவும், இன்று காலையும் அவரது மூத்த சகோதரர் போன் செய்தும் அவர் பதிலளிக்காததால், அவரது வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். ​​​​அவர் கொலை செய்யப்பட்டதை அறிந்து போலிசாருக்குத் தகவல் தெரிவித்தார்.


தடயவியல் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசாரணைக்காக மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், மேலும் தகவலை சொல்ல முடியும்" என்றார்.


அதிரடி காட்டி முதலமைச்சர் சித்தராமையா:


அரசின் உயர் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தை உலுக்கியுள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.


"இப்போதுதான், இது பற்றி தகவல் எனக்கு கிடைத்தது. கொலை தொடர்பாக கடுமையான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அவரது கணவர் சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ​​அவர் தனியாக (பெங்களூருவில்) தங்கியிருந்ததாக தெரிகிறது. கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. அதை விசாரிப்போம்.


கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, அனைத்து கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர். தெரிந்த நபரால் கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் கூட விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


இதையும் படிக்க: Delhi Dog Attack: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்.. பிட்புல் நாயை விட்டு கடிக்க வைத்த நபர் - டெல்லியில் கொடூரம்