திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 முதல் 2024 வரை நடத்தப்பட்ட 52 வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 7780 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு சேவைகள்
வேலைவாய்ப்பு, பயிற்சித்துறையின் கீழ் இயங்கிவரும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் படித்த, படிக்காத வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலைநாடுநர்கள் பதிவு செய்த எண்ணிக்கை
திண்டுக்கல் மையத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்கள் 8 வகுப்பிற்கு கீழ் உள்ள கல்வித் தகுதி முதல் பள்ளிக்கல்வி, இளங்கலை, பட்டயப்படிப்பு, தொழிற்பயிற்சி, ஓட்டுநர், சமையலர் உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட அளவில் பல்வேறு அரசுத்துறைகளால் அறிவிக்கப்படும் பணிக்காலியிடங்களுக்கு இப்பதிவுதாரர்கள் கல்வித்தகுதி, வயதுவரம்பு, பதிவு மூப்பு, இனச்சுழற்சி, முன்னுரிமையின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
தொகை திட்டம்
கல்வி தகுதியினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற (மாற்றுத் திறனாளிகளுக்கு - பதிவு செய்து ஓராண்டு நிறைவுற்ற பின்) குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு கீழ் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி 10 வகுப்பு தோல்வியுற்றோருக்கு ரூ.200 (மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600) தேர்ச்சிபெற்றோருக்கு ரூ.300 (மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.600), 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.400 (மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.750) பட்டதாரிகளுக்கு ரூ.600, (மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1000) வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்படுகிறது. அரசின் பிற உதவித் தொகைத் திட்டங்களில் பயன்பெறாதோர் இத்திட்டத்தில் பயன்பெறலாம். அரசுத் துறையில் வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணி அமர்த்தும் பொருட்டு தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த பயிற்சி வகுப்புகளில் வகுப்புகளுடன் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு உரிய 5000 க்கும் மேற்பட்ட பொது அறிவு நூல்களும், நாளிதழ்களும் அலுவலகத்தில் உள்ள நூலகத்தில் உள்ளது. மையத்தில் பயிற்சி பெற்று 118 பேர் அரசுப் பணியில் உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்கள்
மாவட்ட வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் ஒவ்வொரு 3வது வெள்ளிக்கிழமைகளிலும் சிறிய அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்ட அளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படுகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2021 முதல் 2024 வரை 8 பெரிய முகாம்கள், 44 சிறிய முகாம்கள் என 52 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி 7780 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
இணையதள சேவைகள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் வகையில் பல்வேறு இணையதளங்கள் வேலைவாய்ப்பு துறையால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பதிவு உள்ளிட்ட பொதுவான சேவைகளுக்கு http://tnvelaivaaippu.gov.in/,தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு https://www.tnprivatejobs.tn.gov.in/,போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பிற்கு https://tamilnaducareerservices.tn.gov.in/போன்ற இணையதளங்கள் உள்ளன. இது தவிரTN Career Services Employmentஎன்ற யுடியூப் சேனலும் உள்ளது என்றார்.