Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025 Congress: டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஹாட்ரிக் டக்-அவுட்டை தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Delhi Election 2025 Result Congress: டெல்லியில் கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டமன்ற தேர்தல்:
டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிராஸ், இந்த முறை தனது வெற்றிக் கணக்கைத் திறக்கக்கூடும் என்பதைக் காட்டும் சமீபத்திய போக்குகள் உள்ளன. ஆரம்பகட்ட தரவுகளின்படி, முன்னர் ஆளும் ஆம் ஆத்மி கட்சி (AAP) வசம் இருந்த பத்லி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தற்போது முன்னிலை வகிக்கிறது.
ஹாட்ரிக் டக்-அவுட்?
காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கும் பத்லி தொகுதியில் அக்கட்சி சார்பில், மாநில தலைவர் தேவேந்திர யாதவ் போட்டியிட்டுள்ளார். அவருக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் அஜேஷ் யாதவ், பாஜக சார்பில் தீபக் சவுத்ரி ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். பல தேர்தல் கருத்துகணிப்புகள் தொடர்ந்து மூன்றாவது முறையாக, இந்த தேர்தலிலும் காங்கிரசுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என கணித்தன. இதனை பொய்யாக்கும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் டெல்லியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. ஆனாலும், வெறும் ஒரு தொகுதியில் மட்டுமே அக்கட்சியால் முன்னிலை பெற முடிந்துள்ளது.
கடைசி வெற்றி எப்போது?
2013ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. அரசின் மோசமான செயல்பாடுகளால் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சி ஆட்சியை இழந்தது. 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடைசியாக காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது 28 இடங்களை வென்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் உடன் கைகோர்த்து ஆட்சி அமைத்தது. ஆனால், அந்த அரசு வெறும் 49 நாட்களில் கவிழ்ந்தது. அதைதொடர்ந்து, 2015 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற, பொதுத்தேர்தல்களில் ஒரு இடத்தை கூட காங்கிரஸால் கைப்பற்ற முடியவ்ல்லை. அதேநேரம், தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி கட்சி அடுத்தடுத்து இரண்டு தேர்தல்களிலும் வென்று, ஆட்சியை கைப்பற்றியது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக்
இந்நிலையில் டெல்லி சட்டமன்ற தேர்தலில் கடந்த 5ம் தேதி பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை காட்டிலும், கூடுதலான இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதனால், 10 ஆண்டுகளாக நிடித்த ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு முடிவு கட்டி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் டெல்லியில் ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிகிறது. விரைவில் புதிய முதலமைச்சர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.