தமிழகத்தில் உள்ள 6 கோடியே 30 லட்சம் வாக்காளர்களை சந்தித்து திமுக அரசின் வேதனைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் பட்டி தொட்டி எங்கும் திண்ணை பிரச்சாரம் மூலம் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
கழக அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அதிமுக தலைமை கழகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு கழக அம்மா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட அம்மாபேரவை செயலாளர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சரும், கழக பொருளாளர் திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சரும் கழக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, முன்னாள் அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சரும் கழக இலக்கிய அணி செயலாளர் வைகைசெல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும்
இந்த கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது...,” இங்கு நடைபெற்ற கூட்டத்தில் கழக அம்மா பேரவை சார்பில் மூன்று முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அம்மாவின் பிறந்தநாள் விழாவை கழக அம்மா பேரவை நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம், அன்னதானம், மருத்துவ முகாம், விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திட வேண்டும். இன்றைக்கு எடப்பாடியார் 234 தொகுதிகளிலும், வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். குறிப்பாக இந்த சுற்றுப்பயணத்தில் திமுக ஆட்சியின் அவலங்களை தோலுரித்து காட்டுகிறார், அவரது வருகை என்பது நாம் பாக்கியமாக கருத வேண்டும். 61 மாநில அம்மா பேரவை நிர்வாகிகள், 82 மாவட்ட அம்மா பேரவை செயலாளர்களும் எடப்பாடியார் வரும் பொழுது மாபெரும் சிறப்பான வரவேற்பை நீங்கள் அளித்து எடப்பாடியார் மனதை குளிரவைக்கும் வகையில் நீங்கள் சிறப்பாக செய்திட வேண்டும். எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்கிறது என்பது போல், இன்றைக்கு தமிழகத்தில் 8 கோடி மக்களும் எடப்பாடியார் நோக்கி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என்று கூறுகிறார்கள்.
தட்டிக் கேட்க வேண்டும்
இன்றைக்கு தமிழகத்தில் மக்களாட்சி ஒழித்து, மன்னராட்சி நடைபெற்று வருகிறது, மதுரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், அடுத்த வாரிசுக்கு பட்டாபிஷேகத்தை சூட்டி விட்டனர், கருணாநிதி கூட ஸ்டாலினை கொண்டுவர தயக்காட்டினார், தற்போது ஸ்டாலின் எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. திரைப்படத்தில் வருவது போல ஒரே ஆண்டில் உதயநிதி சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் விரைவில் முதலமைச்சராக கூட பட்டத்தை சூட்டியிடுவார்கள், அப்படி என்றால் தேர்தல் எதற்கு? பேசாமல் தேர்தல் இல்லாமல் கருணாநிதி குடும்பமே ஆளட்டும் என்று சட்டத்தை திருத்திக் கொள்ளலாமே? இன்றைக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது ,இந்த நான்கு ஆண்டுகளில் திமுக அடித்த கொள்ளை எண்ணில் அடங்காது, திமுக கொள்ளைக் கூடாரமாக மாறிவிட்டது. பக்கத்து வீடுதான் எரிகிறது என்று நாம் அமைதியாக இருக்கக் கூடாது, நம் வீட்டிற்கு வர வெகு நேரம் ஆகாது, இன்றைக்கு தட்டிக் கேட்கவில்லை என்று ஆணவத்தில் உள்ளார்கள்” என்று கூறினார்.