இந்த நவீன யுகத்தில் நாம் சாப்பிடும் உணவு மட்டும் பாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு மாறிவிடவில்லை. நாம் உடுத்தும் ஆடைகளும்தான். குறிப்பாக வேட்டி சட்டை என பண்டிகை காலங்களில் வலம்வந்த நம்மில் பலரும் இன்று ரெடிமேட் ஆடைகள் எனும் ஆயத்த ஆடைகளுக்கு மாறிவிட்டோம். அதனால் இன்று குக்கிராமங்களும்கூட ஆயத்த ஆடைகள் விற்பனை மற்றும் தயாரிப்பு பணியில் இறங்கிவிட்டன.




அந்த வகையில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இன்று குட்டி ஜப்பானாகவே மாறிவிட்டது நத்தம் பேரூராட்சி. திண்டுக்கல்லில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 32வது கி.மீ தொலைவில் அமைந்துள்ளது நத்தம். ஊருக்குள் நுழையும் போது எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எல்லா ஊரிலும் இருப்பது போன்ற கடைகளும் அமைதியும் தான். ஆனால் எந்த ஒரு தெருவிற்குள் நுழைந்து சற்று நடந்து சென்றாலும் எங்கும் ரெடிமேட் சட்டை தயாரித்து கொண்டு இருக்கின்றனர். எல்லா தெருவிலும் தையல் மெசின் ஓடும் சத்தத்தை கேட்க முடிகிறது. ஆண்களுக்கான ரெடிமேட் ஆடைகளை தைத்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வரும் நத்தம் பகுதி ஆயத்த ஆடை உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். இதனால் இத்தொழிலில் தற்போது தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று பெயர் பெற்றுள்ளது.




திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட நத்தம், சிறுகுடி, கோட்டையூர், புதுப்பட்டி, பரளி, வத்திப்பட்டி, கோபால்பட்டி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் 300 ஆயத்த ஆடை உற்பத்தியாளர்களையும் கொண்டுள்ளது நத்தம் . இங்கு, 2 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயது ஆண்களுக்கும் ஆயத்த சட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலிஸ்டர், காட்டன், மோனோ காட்டன், பிளாஃபில், ரேமண்ட் காட்டன் ஆகிய ரக துணிகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆயத்த ஆடைகள் ரூ.150 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.




இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆயத்த ஆடைகள் கேரளா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் சென்னை, மதுரை, தேனி, திருப்பூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சேலம், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய் தொற்று பரவல், ஊரடங்கு காரணமாக போக்குவரத்தும், உற்பத்தியும் பாதித்தது . ஆர்டர்களும் குறைந்தன. மூலப்பொருட்களை போதிய அளவு கிடைக்கவில்லை. இதனால் உற்பத்தி தொழில் முடங்கியது


இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்று காரணமாக இரண்டு மாதங்கள் உற்பத்தி பணி நடைபெறவில்லை . தற்போது தமிழக அரசு தளர்வுகள் அறிவித்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் தீபாவளி பண்டிகைக்காக, வெளி மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிய தொடங்கின. இதையடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன. தற்போது தீபாவளிக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.




நத்தம் பகுதியில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுவந்தாலும், ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் சுமார் 8 லட்சம் சட்டைகளை வெளியூர் வியாபாரிகள் வாங்கிச் செல்வது வழக்கம். நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுக்கு குறைந்த விலையில் சட்டைகள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதால், நத்தம், ஆயத்த ஆடை சந்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆண்டு முழுவதும் இத்தொழில் நடைபெற்று வந்தாலும், தீபாவளி, ஓணம் பண்டிகைகளையே உற்பத்தியாளர்கள் பிரதானமாக எதிர்பார்க்கின்றனர். இத்தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நத்தத்தில் ஒரு ஜவுளி பூங்காவை மத்திய, மாநில அரசுகள் நிறுவி இத்தொழிலை உயர்த்தவேண்டும் என ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண