இந்தியாவில் கோயில்களுக்கு பஞ்சம் கிடையாது. தற்போது புதிதாக கட்டப்படும் கோயிலை தவிர, முன்னோர்களால் கட்டபட்ட ஒவ்வொரு பெரிய கோயிலும் பல புராண, வரலாற்று கதைகளை நினைவுபடுத்தும் விதமாக உள்ளன. நாம் பல கோயில்களில் சுவாமி தரிசனம் செய்திருப்போம். அப்போது நீங்கள் சுவாமி தரிசனம் செய்யும்போது சுவாமியின் சிலை உங்களை விட உயரம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருப்பது உணர்ந்திருப்பீர்கள்.




தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் கோயிலின் மூலவர் எப்படி பார்த்தாலும் ஒரே உயரத்தில் காட்சி தரும் வகையில் சிவ பெருமான் காட்சி தருகின்றார். அதாவது நீங்கள் நின்று தரிசித்தாலும் சரி, அல்லது மூலவரின் முன் அமர்ந்து தரிசித்தாலும் உங்கள் உயரத்திற்கு ஏற்ப உயரம் மாறி தெரியும் லிங்கமாக பூலாநந்தீஸ்வரர் காட்சி தருகின்றார்.




பழங்காலத்தில் இந்த பகுதிக்கு ‘அள நாடு’ என அழைக்கப்பட்டது. இதன் தலைநகரமாக வீரபாண்டி இருந்தது. மன்னர் ராஜசிங்க பாண்டியன் ஆண்டு வந்தான். அவனின் அரண்மனையில் பணிசெய்த ஒருவர் தினமும் பாலுடன் இந்த காட்டு பகுதி வழியாக வருவது வழக்கம். ஆனால் சில நாட்களாக அந்த வழியாக வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பூலா மரத்தின் வேர் தடுக்கி கீழே தள்ளிக் கொண்டிருந்தது. இந்த நிலை தொடரவே மன்னனிடம் இது குறித்து தெரிவித்தார் என நம்பப்படுகிறது



பணியாளரின் கூறியதை கேட்ட மன்னன் உடனே அந்த இடத்தை தோண்டிப் பாருங்கள் என உத்தரவிட்டார். அப்போது அங்கு தென்பட்ட ஒரு லிங்கத்திலிருந்து கிளம்பிய ஜோதி விண்ணுக்கும் மண்ணுக்கும் வளரத் தொடங்கியது. சிவ லிங்கத்தை தரிசித்த ராஜசிங்க பாண்டியன், ஈசனே தயவு செய்து என் உயரத்திற்கு ஏற்ற அளவுடன் நேரில் காட்சி தந்து அருளுங்கள் என வேண்டுக் கொண்டான். உடனே மன்னனின் அளவிற்கு மாறிய அந்த சிவ லிங்கத்தைப் பார்த்து வியந்து, ‘அளவுக்கு அளவானவரே’ என புகழ்ந்தார். மனனன் சுவாமியின் மார்பில் தன் முகம் பதிய கட்டி அணைத்து தன் நன்றியை தெரிவித்தார். அன்று முதல் மூலவருக்கு ‘பூலாநந்தீஸ்வரர்’ என பெயர் சூட்டப்பட்டது என நம்பப்படுகிறது.




தற்போது கூட இந்த திருக்கோயிலில் உள்ள மூலவர் சிலையில் மன்னனின் முகம்பதிந்த நிலையில் இருப்பதை காண முடியும். இவ்வளவு  சிறப்பு வாய்ந்த கோவிலில் இந்த வருட திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடந்தது.


கோவிலின் விஷேசமான நாட்கள்: சித்திரை பிரமோற்ஸவம், பிரதோஷம், மகா சிவராத்திரி, ஆவணியில் புட்டு திருவிழா, மார்கழியில் ஆருத்ரா தரிசனம்.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்