திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டு கோட்டைகுளத்தில் கரைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் தலைமையில் 500க்கு மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் நக்சல் சிறப்பு பிரிவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Continues below advertisement

திண்டுக்கல், குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை கோட்டை குளத்தில் கரைக்கப்படும். இதற்காக விநாயகர் சிலை ஊர்வலமாக மேல தாளங்களுடன், வெடிகள் வெடித்தபடி கொண்டு செல்லப்பட்டது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக ஊர்வலம் நடைபெற்றது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக எந்த அமைப்புகளுக்கும் இவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

Continues below advertisement

ஆனால், ஊர் மக்களின் சார்பாக நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமியர்கள் வாழும் பகுதியில் செல்லும் பொழுது மேலத்தாளங்கள் வாசித்ததால் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு பிரச்சனைகள் ஏற்பட்டதன் காரணமாக இந்த முறை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஊர்வலத்தில் கலந்து கொண்டு அவரின் கண்காணிப்பின் கீழ் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நக்சல் சிறப்பு பிரிவு காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஊர்வலம் செல்லக்கூடிய வழிகளில் உள்ள மசூதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பேகம்பூர் பகுதி மசூதி வாசலில் காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.

மேலும், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பேகம்பூர் பகுதி என்பதாலும்,  பேகம்பூர் பெரிய மசூதி உள்ளதாலும் மேளதாளங்கள் வாசிப்பதை நிறுத்தப்பட்டு குறிப்பிட்ட 500 மீட்டர் பகுதிகளுக்கு பஜனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதன்படி, விநாயகர் சிலை ஊர்வலம் இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய பேகம்பூர் பகுதி அருகே வந்ததை அடுத்து மேளதாளங்கள் நிறுத்தப்பட்டு பஜனை வாத்தியங்களுடன் விநாயகர் ஊர்வலம் தொடங்கப்பட்டது. பின், பேகம்பூர் மசூதியை தாண்டி யானை தெப்பம் பகுதியில் மேள தாளங்கள் மீண்டும் தொடக்கப்பட்டது. மேலும் குடைபாறைப்பட்டி ஊர்மக்கள் சார்பாக பேகம்பூர் பகுதி அருகே வரும் முன்பே மேல தாளங்களை காவல்துறை நிறுத்தியதாகவும், இஸ்லாமியர்கள் சார்பில் மேளதாளங்கள் குறிப்பிட்ட இடத்தை விட அதிகமாக அனுமதித்ததாகவும் காவல்துறையிடம் வாக்குவாதங்கள் நடைபெற்றது. இருந்த போதும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக விநாயகர் ஊர்வலத்தை முடித்து விநாயகர் சிலையை கோட்டை குளத்தில் கரைத்தனர்.